கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் உயிர் காக்குமா?
25.10.09
ஏழைகளின் நலனுக்காக கலைஞர் காப்பீட்டுத்திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. 'ஒரு கோடி குடும்பங்களின் உயிர் காக்கும்' என்று கூறப்பட்டுள்ள இத்திட்டம் உண்மையில் மக்கள் நலனுக்காகதானா? தமிழகத்தில் 15 மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 235 வட்டம்-வட்டம் சாரா மருத்துவமனைகள், 1422 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8407 ஆரம்ப சுகாதார துணை நிலையங்கள், அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துமனைகள் (இஎஸ்ஐ) மற்றும் மருந்தகங்களும் செயல்படுகின்றன.இவைகளில் தேவையான மருந்துகளும், மருத்துவர்களும், செவிலியர்களும், இதர பணியாளர்களும் இல்லை. நவீன மருத்துவ உபகரணங்களும் போதுமான அளவிற்கு இல்லை.
ஆனால் அரசு ஆண்டிற்கு ரூ.2,800 கோடி செலவு செய்கின்றது. இத்தொகையும் கூட மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இல்லை. இதுவும் யானைப்பசிக்கு சோளப்பொரியே.ஆனால் தனியார் மருத்துவமனைகளோ புற்றீசல் போல் பெருகி வருகின்றன. தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் பணம் பறிக்கும் வகையிலேயே செயல்படுகின்றன.. இவை அரசின் எந்த கட்டுப்பாட்டிலும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ள திட்டம் உண்மையாக இருந்தால் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கு அப்பணத்தை செலவிட்டு தரப்படுத்தலாமே? அதன் மூலம் ஏழை - எளிய மக்கள் பயன்பெறலாமே?ஆனால், கலைஞரின் காப்பீட்டுத்திட்டம் செயல்பட ஆண்டிற்கு ரூ.469 கோடி ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டுக்கு பிரீமியமாக செலுத்த வேண்டும். சர்வீஸ் வரியாக ரூ.48.307 கோடி ஆக ரூ.517.307 கோடி செலவாகின்றது.
இத்தொகையை ஏன் அரசு மருத்துவமனைகளில் செலவு செய்யக் கூடாது? அதே போன்று பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் மூலமாக இத்திட்டத்தை ஏன் அமலாக்கக்கூடாது?தற்போது அறிவித்துள்ள திட்டம் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற பன்னாட்டு நிறுவனம் - தமிழக ஆட்சியாளர்களும் இடையேயான உடன்பாட்டின் மூலம் கமிஷன் பெறவே இத்திட்டம் பயன்பெறும். மக்களின் உயிரைக்காக்காது.
கேலிக் கூத்தான நிபந்தனைகள்இத்திட்டத்தில் பயனடைவதற்காக, ஒரு குடும்பத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே. ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு குறைவாக இருக்க வேண்டும். முறைசாரா உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியத்தின் உறுப்பினர் மற்றும் விவசாய, விவசாய தொழிலாளர் நலவாரிய உறுப்பினராக இருக்க வேண்டும். அரசாங்கத்தால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாள / குடும்ப அட்டை வைத்திருக்க வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்க தேவைப்படும் மருத்துவ ஆவணங்கள் வேண்டும்.
இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைபெற தகுதியானவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது என்று நிபந்தனைகள் உள்ளன.மேலும், இத்திட்டத்தில் பயன்பெற வேண்டிய நோயாளி இன்சூரன்ஸ் நிறுவனம் நிர்ணயித்த மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சைபெற முடியும்.
சிகிச்சைக்கான செலவு முழுவதும் கிடைக்காது. நிறுவனம் தீர்மானிக்கும் தொகையை மட்டுமே வழங்கும். அறுவை சிசிக்சைக்கு முன்னும் பின்னும் ஆகும் செலவும் கிடைக்காது. இத்திட்டத்தில் உள்ள சிகிச்சைகள், இருதய நோய், புற்றுநோய், சிறுநீரக நோய், மூளை மற்றும் நரம்பு மண்டலம், முடநீக்கியல் நோய், கண்நோய், இரத்த குழாய் நோய், கருப்பை நோய், இரைப்பை மற்றும் குடல் நோய், காது, மூக்கு, தொண்டை நோய், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இதர பிற நோய்கள் இவைகளை ஒட்டிய 51 நோய் களுக்கான அறுவை சிகிச்சைக்கு மட்டுமே இத்திட்டத்தில் குறைந்தபட்ச பயன் பெறமுடியும்.ஒரு இருதய சிறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு 4 லட்சம் என்றால், மீதமுள்ள 3 லட்சத்தை எந்த ஏழை தொழிலாளர்கள் - விவசாயிகள் குடும்பம் வைத்திருக்கும்.
இதன் மூலம் எப்படி மக்கள் பயனடைய முடியும்.மேற்கூறிய நோய்களுக்கான அறுவை சிகிச்சையை ரூபாய் ஒரு லட்சத்துக்குள் செய்ய முடியாது என்று தமிழக அரசுக்கு தெரியாதா?தெரியும். 'மக்கள் திட்டம் - ஏழைகளின் திட்டம்' என்று ஏமாற்றி பை நிரப்பும் வேலை என்பது எல்லோருக்கும் தெரியும்விரைவில் கலைஞரும் உணர்வார் என்று நம்பலாம்...
0 comments:
Post a Comment