"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


நானும் ஒரு தீவிரவாதி! வா,வந்து என்னைச் சுடு!

27.10.09


பாகிஸ்தான், துபை, குஜராத்திலிருந்து உங்களுக்கு அழைப்புகள் வருகின்றனவா?
ஹ... ஒரு நிமிஷம்! குஜராத்தில் எங்கிருந்து? கோத்ரா, ஹிம்மத் நகர், சூரத், அஹ்மதாபாத், வடோதரா, தலோல், தஹோட், சபர்கந்தா, பனஸ்கந்தா ஆகிய இடங்களிலிருந்தா?
இங்கிருந்து அழைப்பவர்கள் தொண்ணூறு விழுக்காட்டினர் முஸ்லிம்கள்! மூன்று நாட்களுக்குமுன் அமெரிக்காவில் இருந்து காலை 2 மணிக்கு அழைப்பு, அழைத்தவர் ஒரு முஸ்லிம்; இன்று கராச்சியிலிருந்து, நேற்று காஷ்மீரிலிருந்து.
உங்கள் மின்மடல்களைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். உங்கள் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன!
ஆட்வாணி, வாஜ்பேயியைக் கேலியாகப் பேசுகிறீர்களா?
மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறீர்களா?
தொகாடியாவைக் கைது செய்ய வேண்டும் என்கிறீர்களா?
உங்கள் புத்தக அலமாரியில் அரபி, உருது புத்தகங்கள் இருக்கின்றனவா?
உருது புத்தகம் கவிதைப்புத்தகமா? நம்ப முடியாது! கவிதை வடிவில் ஒரு பயங்கரவாதச் செயலுக்கான திட்டம் நிச்சயம் இருக்கும்!
அருகிலிருக்கும் புத்தகத்தில் ஹிட்லர் பெயர் அடிக்கோடிடப்பட்டுள்ளதே! ஆ என்ன சொன்னீர்கள்? மோடி ஹிட்லருக்கு ஒப்பானவரா? நிச்சயம் ஏதோ சதித்திட்டம் தீட்டுகிறீர்கள்!
என்னது? உங்களிடம் கோத்ரா சம்பவம் குறித்த ஆவணங்கள் உள்ளனவா? அதுகுறித்த இவ்வளவு வீடியோ போட்டோக்கள் உங்களிடம் எதற்கு? மோடியின் பெயரைக் களங்கப்படுத்தும் சதி தானே இது? ஐஎஸ்ஐ யுடன் உங்களுக்குத் தொடர்பு இருக்கும் சாத்தியம் உள்ளது.
இதென்ன மும்பை, கொல்கத்தா, தில்லி, சென்னை, பெங்களூர் வரைபடங்கள்? எங்கெல்லாம் குண்டு வைக்கலாம் எனத் திட்டம் தீட்டத் தானே?
நாள் குறித்துக்கொள்ளுங்கள். அடுத்தவாரம் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். எதற்கா? வேறு எதற்கு? வழியில் உங்களை விடுவித்ததாகச் சொல்லி நீங்கள் நகரும் போது என்கவுண்டரில் போட்டுத் தள்ளத்தான்!
உங்களிடமிருந்து கைப்பற்றப் படப்போகும் ஆதாரங்களைப் பற்றிக் கேள்வி வேண்டாம். உங்கள் கைகளிலும் பைகளிலும் எங்கள் இருப்பில் இதற்காகவே சேர்த்து வைத்திருக்கும் நிறைய வெடிபொருள்களையும் ஏகே47 ரக துப்பாக்கிகளையும் நாங்களே திணித்து விடுவோம்.
பிரபல தொலைக்காட்சி சேனல்களுக்கு முன்னதாகவே தகவல் சொல்லி விடுவோம். அடுத்த நாள் முழுக்க நீங்கள்தான் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் தெரிவீர்கள் - பிணமாகத்தான், அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள்!
தலைப்பு என்னவா? தயார் செய்துவிட்டோம்!
கொடிய பெண் தீவிரவாதி என்கவுண்டரில் கொலை!
ஃஃஃஃஃஃஃ
இன்னும் என்ன தயக்கம் நீதிமான்களே, காவலர்களே?
என்னிடம் உருது நூல்கள் நிறைய உள்ளன;
எனக்கு அமெரிக்காவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் குஜராத்திலிருந்தும் காஷ்மீரிலிருந்தும் முஸ்லிம்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன;
நான் படித்தவள்; இருகுழந்தைகளின் தாய்; ஓர் அறிவியலாரின் மனைவி; நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள்! என்னிடம் உருது நூல்கள் உள்ளன;
இந்தியாவின் முக்கிய நகரங்களின் வரைபடங்கள் உள்ளன!
வேறென்ன வேண்டும் பொதுமக்களைக் காக்கும் கடமை தவறாக் காவலரே!
வா, வந்து என்னைச் சுட்டுக் கொல்! -
அபூஷைமா

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP