கோர்ட்டில் 2 குற்றவாளிகள் சண்டை
4.2.10
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த நரோடா பாட்டியா கலவர வழக்கில் தொடர்புடைய 2 குற்றவாளிகள், கோர்ட்டில் நீதிபதி முன்பு கன்னத்தில் அறைந்து கொண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெறியாட்டம் தலைவிரித்தாடியது. அப்போது நரோடா பாட்டியா என்ற இடத்தில் முஸ்லீம்களை வெறியுடன் தாக்கினர். இந்த சம்பவத்தில் 95 முஸ்லீம்கள் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர், படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு அகமதாபாத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஜோத்சனா யாக்னிக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு அதிகாரி ஒருவர் சாட்சியம் அளித்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியில் உள்ள திணேஷ் மராத்தி மற்றும் விஜய் ஷெட்டி ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர்.
அப்போது திடீரென மராத்தி, விஜய் ஷெட்டியுடன் வாக்குவாதத்தில் இறங்கினார். அதன் பின்னர் ஷெட்டியை பளார் என கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு ஷெட்டியும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மராத்திக்கு கொடுக்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்த நீதிபதி, அவரை உடனடியாக சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மேலும் இருவர் மீதும் காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல், அரசு ஊழியர் பொதுப் பணியை செய்யும்போது அதை செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment