கூகிள் பஸ் (Buzz) - விளைவுகள்??
2.3.10

வணிக உலகில் வெற்றி என்பது நிரந்தரமாகத் தொடர்ந்து கொண்டே இராது. மனிதன் பலவீனமானவனாகப் படைக்கப்பட்டிருப்பதன் சான்றுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆளானப் பட்ட டொயோட்டாவே சுழன்று அடிக்கும் ஆடிக்காற்றில் பறப்பதையும் கண்டு கொண்டிருக்கிறோம். அதிக விளக்கம் தேவையில்லை கூகிளின் சறுக்கலை விளக்க.
இன்றுவரை மைக்ரோசாஃப்ட், யாஹூ போன்ற ஜாம்பவான்களுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வந்த கூகிள், தற்போது லின்க்டு இன், ஃபேஸ்புக் போன்ற உறவுப்பால இணையதளங்களின் அதிரடிப் படையெடுப்பால் சற்றே மிரண்டு போயுள்ளது தெளிவாகத் தெரிகிறது. கூகிளின் தற்போதைய அறிமுகமான கூகிள் பஸ் (Buzz) உறவுப்பால அடிப்படையில் திடீரெனத் தங்கள் ஜிமெயிலில் முளைத்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அது மகிழ்ச்சியான வியப்பா அல்லது கவலையால் விளைந்த அதிர்ச்சியா என்று பார்க்கும் போது, அதிகமாக இரண்டாவது வகையாகத் தான் பலருக்கு இருக்கிறது.
தன் அபிமான நடிகரோ அல்லது அரசியல் தலைவரோ ஏதேனும் சிக்கலில் மாட்டிக் கொண்டால் சேச்சே அப்படில்லாம் இருக்காது; என் தங்கத் தலைவன் சொக்கத் தங்கமாக்கும்; எதிரிகளின் சூழ்ச்சி என்ற விளிம்புநிலை ரசிகர்கள் கூகிளுக்கும் இல்லாமல் இல்லை; அவர்கள் தான் கூகிள் பஸ் (Buzz) ஏதோ அற்புதமான வெளியீடு என சிலாகித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் கூகிள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அப்படி!
சரி என்னதான் பிரச்னை இந்த பஸ்(Buzz)ஸில்?
நீங்கள் யார் யாரிடம் எல்லாம் ஜிமெயில் அரட்டை செய்தீர்களோ அவர்கள் பெயர்கள் உங்கள் பஸ்ஸில் தோன்றிவிடும். உங்களிடம் எவரெல்லாம் அரட்டை அடித்தாரோ அவர்கள் அனைவரும் தானியங்கியாக நீங்கள் பஸ்ஸில் எழுதும் அனைத்தையும் கண்டுகொள்வர் (சுருக்கமாகப் பின் தொடர்வர்) அந்நபரைப் பின் தொடர்வோரில் உங்கள் விபரம் மறைக்கப்பட வேண்டியவரும் இருக்கலாம்.
இதில் என்ன வில்லங்கம் என்றால் உங்கள் தனிப்பட்ட விபரம் தற்போது ஊரறிந்த ரகசியம் ஆகிவிட்டது. நீங்கள் கேட்காமலே உங்கள் விபரத்தை மற்றவர் அறிந்து கொள்வர்.
சரி போகட்டும். அதனால எனக்கென்னய்யா பிரச்னை?
உலகின் மற்ற எந்த ஒரு நிறுவனத்தை விட மிக அதிகமான தனிநபர் விபரங்கள் கூகிள் கருவூலத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இத்தகவல்களை கூகிள் எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்று இதுவரை தெளிவாக கூகிள் சொல்லவில்லை; யாரும் கேட்கவும் இல்லை; மக்களுக்கு கூகிள் மீதிருக்கும் நம்பிக்கை அப்படி!
நம்மைக் கேட்காமலே பஸ் விட்டு நம் பல்ஸ் எகிற வைத்த கூகிள் இதற்குமுன் என்னவெல்லாம் செய்ததோ தெரியாது; இனி என்ன செய்யப்போகிறதோ அதுவும் தெரியாது.
உடனடியாக நான் செய்து கொண்டது பஸ்ஸை அணைத்து வைத்தது தான்.
உங்கள் கூகிள் செட்டிங்ஸில் சென்று பஸ்ஸைச் சொடுக்கி டிஸ்ஏபிள் என்ற தெரிவு தான் நான் முதலில் செய்து கொண்டது. (கூகிள் இந்தச் சுட்டியை பஸ் வெளியிடும்போது வைக்கவில்லை என்பதும் தான் செய்த இமாலயத் தவறால் தன் பெயர் களங்கம் அடைவதைத் தடுக்கவும் இந்தச் சுட்டியை பிற்பாடு வைத்தது என்பதும் தனித் தகவல்)
யாரேனும் கேள்வி கேட்டால் கூகிளின் ஸ்டாண்டர்டு பதில் இது தான். "நம்புங்கப்பா எங்களை; நாங்க ரொம்ப நல்லவங்களாக்கும்!"
இன்னும் கொஞ்சம் உரக்கக் கேட்டவுடன் கூகிள் முதலாளி லாரி பேஜ் உதிர்த்த முத்து என்ன தெரியுமா?
"இவ்ளோ ஏன்ப்பா பயப்படுறே? அப்பன்னா நீ எதாச்சும் டகால்ட்டி வேலை பண்றியா?"
இதே போக்கு நீடித்தால் கூகிளின் நம்பிக்கை அரிதாரம் விரைவில் கலையும்!
0 comments:
Post a Comment