200 வருட பாரம்பரியமிக்க மதரஸா பூட்டக்கூடிய நிலையில்
13.4.10
மேற்குவங்காள அரசின் கடுமையான புறக்கணிப்பின் காரணமாக 200 ஆண்டு பாரம்பரியமிக்க மதரஸா பூட்டவேண்டிய நிலையில் உள்ளது.
பிரபல சமூகசேவகரான ஹாஜி முஹம்மது முஹ்ஸின் நன்கொடையாக அளித்த நிலத்தில் கடந்த 1817 ஆம் ஆண்டு ஹூக்ளியில் கட்டப்பட்ட மதரஸாதான் மூடப்படவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
மேற்குவங்காளத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் சின்சூரா நகரில் அமைந்துள்ள இம்மதரஸாவில் ஒரு சில ஆசிரியர்களே உள்ளனர். இம்மதரஸாவில் தற்காலிகமாக பணியாற்றும் தலைமையாசிரியர் மாற்றுச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு மாணவர்களிடம் வேறு கல்வி நிலையங்களுக்குச் செல்ல நிர்பந்திக்கிறார். கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி ஒரேயடியாக ஆறு ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டனர். தற்ப்பொழுது 12 ஆசிரியர்களே உள்ளனர். குறைந்த கட்டணத்தில் தங்குமிட வசதி கிடைக்குமென்றாலும் இதனை 20 மாணவர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
தலைமையாசிரியர் நாஸிர் அலி அன்சாரி மாணவர்களிடம் இதர கல்வி நிலையங்களுக்குச் செல்ல வற்புறுத்துவதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மார்ச் 19 ஆம் தேதிக்குப்பிறகு 50 மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் சென்றுள்ளனர். புதிய மாணவர்கள் கல்வி கற்க அனுமதிக்க மதரஸா அதிகாரிகள் தயங்குவதாக அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மதரஸாவை பூட்டுவதற்கான முயற்சிக்கெதிராக ஊர்மக்களும், பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் போராட்டத்தை துவக்கியுள்ளன.
1806 ஆம் ஆண்டு வக்ஃப் போர்டின் நிதியை பயன்படுத்தி துவங்கப்பட்ட மதரஸாவில் 1915 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் அரசு நவீன கல்வியை உட்படுத்தி மாற்றத்தைக் கொண்டுவந்திருந்தது. 1940 ஆம் ஆண்டு முதல் இண்டர்மீடியேட் கல்லூரியும் மதரஸாவில் செயல்படுகிறது.
சுதந்திரத்திற்கு பிறகு மேற்குவங்காளத்தின் அரசு மதரஸா போர்டின் அலுவலகம் இங்குதான் செயல்பட்டிருந்தது. முற்றிலும் அரசுக்கு உரிய ஒரேயொரு மதரஸாவான ஹுக்ளி மதரஸாவை மேற்கு வங்காள கல்வித்துறை நேரிடையாக நிர்வகிக்கிறது. சர் சயீத் அமீர் அலி, மவ்லானா அபூபக்கர் சித்தீக், பங்களாதேஷ் பிரதமராக பதவி வகித்த தாஜுத்தீன் அஹ்மத், ஷா அனீசுர்ரஹ்மான், வங்காள இலக்கியவாதி முனீசுர்ரஹ்மான் இஸ்லாமாபாதி உள்ளிட்ட பல பிரமுகர்களும் இங்குதான் கல்வி பயின்று சென்றுள்ளனர்.
ஹாஜி முஹ்ஸின் தயார் செய்த வக்ஃப் சட்டப்படி மதரஸா முற்றிலும் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என முஸ்லிம் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இங்கு பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையில் பெரும்பகுதி முஹ்ஸின் நிதியிலிருந்துதான் கொடுக்கப்படுகிறது. மேற்குவங்காள அரசின் செயல்பாட்டின் காரணமாகத்தான் மதரஸாவை இழுத்து மூடவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
1982 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல்வரை நியமிக்கவில்லை. மதரஸாவின் ஆசிரியர்களை தேர்வுச்செய்வது அரசு தேர்வாணையம் மூலமாகும். கடந்த 30 ஆண்டுகளில் தேர்வுச்செய்யப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பாலோர் முஸ்லிம் அல்லாதவர்களாவர். இதர அரசு கல்வி நிலையங்களில் இடம் மாறிச்செல்வதற்காக இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து முயற்சிச் செய்துவருவதாக இப்பகுதி முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரசின் வாய்வழி உத்தரவின் கிடைத்ததன் காரணமாகத்தான் தான் மாணவர்களிடம் வேறு கல்வி நிலையங்களுக்கு மாற்று சான்றிதழ் வாங்கிச்செல்ல நிர்பந்திப்பதாக கூறுகிறார் மதரஸாவின் தற்காலிக தலைமையாசிரியர் நாஸிர் அலி. மதரஸாவை பூட்டி விட்டு ஆங்கில மீடியம் பள்ளிக்கூடம் துவங்குவதற்கு அரசு திட்டமிடுவதாக அவர் விளக்கமளித்தார்.
ஆனால் மேற்கு வங்காள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.அப்துல் சத்தார் கூறுகையில், மதரஸாவின் தன்மையை மாற்றுவதுக் குறித்து தற்பொழுது ஆலோசிக்கவில்லை என்றார். கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி மதரஸாவிற்கு முன்பு நடந்த போராட்டத்தில் மாநிலத்தின் பெரும்பாலான முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளும் சில அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.
திரிணாமுல் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அமித் ரோய், ஜம்மியத்துல் உலமா ஹிந்த் தலைவர் சித்தீகுல்லாஹ் சவுதரி, சிறுபான்மை இளைஞர் பெடரேசன் தலைவர் முஹம்மது கமருஸ்ஸமான் ஆகியோருடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஜமாஅத்தே இஸ்லாமி, இந்திய தேசிய லீக், மேற்குவங்காள மதரஸா மாணவர் யூனியன் ஆகிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
புதிய ஆசிரியர்களை நியமிக்காமல் பழைய ஆசிரியர்களை மாற்றக்கூடாது, காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக, ஹூக்ளி மதரஸாவை தொல்பொருளாக மாற்றக்கூடாது ஆகியவைதான் முஸ்லிம் அமைப்புகள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகளாகும்.
செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்
0 comments:
Post a Comment