"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்!

1.11.10

காலச் சக்கரத்தை சுழற்றும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...
வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 89:1, 2)


இந்த பத்து இரவுகளைப் பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது...
(துல்ஹஜ் மாதத்தின்) 'பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்'; என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், 'அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்(அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத போராளியைத் தவிர' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: திர்மிதீ 688


(துல்ஹஜ்) பத்து நாட்களில் செய்யும் எந்த நல்லறமும் 'அய்யாமுத்தஷ்ரீக் நாட்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விட சிறந்ததல்ல? என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜிஹாதை விடவுமா? என்று நபித்தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்து புறப்பட்டு இரண்டையும் இழந்து விட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 969


இஸ்லாமிய ஆண்டுக் கணக்கில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தை இறையருளால் நாம் அடையவுள்ளோம். இஸ்லாம் குறிப்பிடும் புனித மாதங்களில் இந்த துல்ஹஜ் மாதமும் ஒன்றாகும். மனித இனத்தின் உயர்வுகளுக்கு வழிகாட்டும் ஏக இறைமார்க்கம், இம்மாதத்திலும் மனிதர்கள் இறையருளையும் இறையச்சத்தையும் பெறுவதற்குண்டான நேரிய காரியங்களைக் கற்றுத் தருகிறது.


இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றான ஹஜ் மற்றும் அதன் கிரியைகளுக்கான காலகட்டம் இம்மாதத்தின் முதல் பத்து நாட்களிலேயே அடங்கியுள்ளது. இன்னும் உம்ரா, அரஃபா தின நோன்பு, பெருநாள் தொழுகை, குர்பானி போன்ற நல்லறங்களும் அல்லாஹ்வின் கிருபையால் துல்ஹஜ்ஜின் பத்து நாட்களிலும் அதைத் தொடர்ந்து அய்யாமுத்தஷ்ரீக் நாட்களிலும் அனுகூலமாயிருப்பதை உணரலாம்.


'...அந்த நாட்களில் 'லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ் ஆகியவற்றை அதிகமாக கூறுங்கள்' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: தப்ரானி)


அரஃபா தினத்தில் (ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் நாள்) நோன்பு நோற்பது, அதற்கு முந்தைய ஒரு வருடம், அதற்கடுத்த ஒரு வருடம் ஆகிய இரு வருடங்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கை வைக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுகதாதா(ரலி) நூல்: திர்மிதீ 680
எனவே அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பது நபிவழியாகும்.


பெருநாள்!


அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவை வந்தடைந்த போது, மதினாவாசிகளுக்கு விளையாடுவதற்கென இரண்டு நாட்கள் இருந்தன. அந்த இரு நாட்களில் மதீனாவாசிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'இந்த இரு நாட்கள் எவ்வகையைச் சேர்ந்தது? எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அறியாமை காலத்தில் (இந்நாட்களில்) நாங்கள் விளையாடக் கூடியவர்களாக இருந்தோம் என்றனர். (அதைக்கேட்ட) அல்லாஹ்வினதூதர்(ஸல்) அவர்கள் 'நிச்சயமாக அல்லாஹ் அவ்விரு நாட்களை விடச் சிறந்ததாகவும், அவ்விரு நாட்களுக்குப் பதிலாகவும் 'அள்ஹா (எனும் ஹஜ்ஜுப் பெரு) நாளையும், ஃபித்ரு (எனும் ரமளான் பெரு) நாளையும் வழங்கியிருக்கிறான்' என்று கூறினார்கள். அனஸ்(ரலி) நூல்: ஸஹீஹ் அபுதாவுத் 1004


அறியாமைக் காலத்திலிருந்த இரு நாட்களுக்குப் பகரமாக மாட்சிமைமிக்க அல்லாஹ் தன் அடியார்களுக்கு நல்கிய நாட்கள்தான் இந்த இரு பெருநாட்கள். இந்த இரண்டு நாட்களிலும் தொழுவது, குத்பா (பிரசங்கம்) நிகழ்த்துவதோடு வேறு சில காரியங்களைச் செய்வதும் நபிவழியாகும்.


அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உண்ணும் வரை ஈதுல்ஃபித்ர் பெருநாளன்று (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஈதுல் அள்ஹா பெருநாளன்று தொழுது முடிக்கும் வரை உண்ண மாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா(ரலி) நூல்: ஸஹீஹ் இப்னுமாஜா 1756


அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஈது (தொழுகை)க்கு நடந்தவர்களாக வந்து, (தொழுதபின்) நடந்தே திரும்பிச் செல்வார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் ஸஅது(ரலி) நூல்: ஸஹீஹ் இப்னுமாஜா 1070


நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்;முதலில் தொழுகையையே துவக்கு வார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப் பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்கு படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப்பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத்(ரலி) நூல்: புகாரி 956


நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்கு) புறப்படச் செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகி இருப்பார்கள். உம்மு அதிய்யா(ரலி) நூல்: புகாரி 974


நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 960


(ஈதுல்)ஃபித்ருவிலும், (ஈதுல்)அள்ஹாவிலும் நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் ருகூவின் தக்பீர் நீங்கலாக (இரண்டு ரக்அத்களிலும் கிராஅத்துக்கு முன்) ஏழு-ஐந்து தக்பீர்களை கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: ஸஹீஹ் அபூதாவுத் 1043


நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். 'யார் நமது தொழுகையைத் தொழுது, நாம் குர்பானி கொடுப்பது போல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத் தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள். பரா பின் ஆஸிப்(ரலி) நூல்: புகாரி 955

பெருநாள் வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும், வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 986


பெருநாட்களையும், திருநாட்களையும் வீணான கேளிக்கைகளிலும் ஆடம்பரங்களிலும் திளைத்துக் கழிக்கின்ற உலகோர்க்கு மத்தியில் அந்த தினங்களையும் இறைவனுக்கு உவப்பான வழிகளில் கண்ணியப்படுத்தச் செய்யும் மார்க்கத்தின் அம்சங்களை கடைப்பிடிப்போமாக! அல்லாஹ் கருணையாளன்!

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP