இலட்சியப் பாதை...........
7.12.10
ஒருவர் தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன் பயணத்திற்கு தேவையான வாகணத்தையும்,பொருட்களையும் சேகரித்துக் கொள்வதைப்போல் பயணத்திற்கான வழித்தடத்தை அறிந்து வைத்திருப்பதும் அவசியமாகும். வழி தெரியாமல் பயணித்தால் சென்றடைய வேண்டிய ஊர் வந்து சேராது. சென்றடைய வேண்டிய ஊர் வராவிட்டால் பயணத்திற்கான நோக்கம் மாறிவிடும். உலகிலிருந்து மறுமைக்குத் தொடங்குகின்ற மனிதனின் நீண்ட தூரப் பயணத்திற்கிடையில் சிறிது ஓய்வெடுப்பது கப்ருஸ்தானில் மட்டுமே. அவ்வாறு ஓய்வெடுக்கும் கப்ருஸ்தானில் சுவனத்தின் சுகந்த காற்றா? நரகத்தின் வெப்பக் காற்றா? முற்றுப் பெறும் மறுமை பயணத்தில் சொர்க்கமா? நரகமா? என்பதற்கு உலகிலிருந்து தொடரும் மனிதனின் பயணத்தில்; சிறந்த வழிகாட்டியாக அமைவது தொழுகை தான். தொழுகை முறையாக இல்லை என்றால் ? மறுமையில் நெருப்பும், கப்ருக்குள் அதன் அணல் காற்றும் என்பது உறுதியாகி விடும். தொழுகையில் ஓதப்படுவது அரபியிலான வாசகங்கள் என்பதாலும் அதன் அர்த்தங்கள் தாய்மொழியில் மாற்றப் படாதக் காரணத்தாலும் அதிகமானோர் அதன் அர்த்தம் தெரியாததால் அலச்சியம் செய்தனர். அர்த்தம் தெரிந்தால் எவரும் தங்களுடைய பாவங்கள் இந்த உலகிலேயே தொழுகையின் மூலம் மன்னிக்கப்பட்டு விட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். பாவத்தைக் கழுவி தூய்மைப் படுத்திடு இறைவா! தொழுகைக்காக தக்பீர் சொல்லி கை கட்டி நின்றதும் முதலில் ஓதப்படுவதே பாமன்னிப்புகாகவும்,குற்றமிழைப்பதிலிருந்து தூரப்படுத்துவதற்குமான பிரார்த்தனை என்றால் ஆச்சரியமாக இல்லையா? மனிதகுல முன்னேற்றத்திற்காக அருளப்பட்ட அருட்கொடை தான் இஸ்லாம் என்பதற்கு தொழுகையின் முதல் வாசகமே மனிதனின் பாவமன்னிப்புக்கான வாசகங்கள் அமைக்கப்பட்டிருப்பது சிந்தித்து உணரும் மக்களுக்கு மிகப் பெரிய உதாரணமாகும். 'அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் பொருள்: இறைவா! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும், என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும்,பனிக்கட்டியாலும், மன்னித்தருள் இறைவா! அதற்கடுத்து வரும் சூரத்துல் ஃபாத்திஹாவின் நேர்வழிக்கான துஆவை கடந்த கட்டுரையில் பார்த்தோம். சூரத்துல் ஃபாத்திஹாவைத் தொடர்ந்து வரும் ருகூஹ்விலும், ஸஜ்தாவிலும் அல்லாஹ்வைப் புகழ்ந்தப்பின் அதற்கடுத்ததாக கூறப்படுவதும் பாவமன்னிப்புக்கான வாசகங்களாகும். ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி (இறைவா! நீ தூயவன்; எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு )நூல்கள்: புகாரீ 794, முஸ்லிம் 746 உதவி செய் இறைவா! இதனை அடுத்து இதே ஸஜ்தாவில் தன் மனம் விரும்பிய உலக, மற்றும் மறுமைக்கான அனைத்துத் தேவைகளையும் தனது தாய் மொழியிலேயே கேட்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பணி புரியக்கூடிய கம்பெனியில் சம்பள உயர்வும், இதர சலுகைகளும் கூடுதல் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்களா? ஸஜ்தாவில் கேளுங்கள்! குணநலம் மிக்கவளாக மனைவி அமைய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ஸஜ்தாவில் கேளுங்கள்! நல்லொழுக்கமுள்ள பிள்ளைகளாக வளர வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ஸஜ்தாவில் கேளுங்கள்! தீராத தலை வலியா, வயிற்று வலியா, இன்னும் பிற வலியா? நிவாரணத்திற்காக ஸஜ்தாவில் கேளுங்கள! பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்பட வேண்டுமா ? ஸஜ்தாவில் கேளுங்கள்! தாங்க முடியாத மனவேதனையா யாரிடமாவது சொல்லி அழுதால் தான் தீரும் என்று நினைக்கிறீர்களா?உலகில் எவரை விடவும் ஸஜ்தாவில் நெருங்கும் அல்லாஹ்விடம் சொல்லி அழுது விடுங்கள் மொத்த பாரமும் இறங்கி மனம் லேசாகி விடும்! '...ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 824 மன்னித்து விடு! மன்னித்து விடு! இறைவனிடம் மொத்த பாரத்தையும் இறக்கி வைத்துவிட்டு தலையை உயர்த்தி இருப்பில் அமர்ந்ததும் இறைவா! என்னை மன்னித்து விடு! இறைவா! என்னை மன்னித்து விடு! என்று இரண்டு தடவைக் கேட்கிறோம். நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே, ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு; இறைவா! என்னை மன்னித்து விடு)' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)நூல்: நஸயீ 1059 மேற்காணும் இரண்டு ஸஜ்தாவிலும், இரண்டு இருப்பிலும் நம்முடைய உலக - மறுமைத் தேவைகளையும்,பாவமன்னிப்புமே அதிகம் கேட்கப்படுகிறது. அருள் மழைப் பொழிவாய் ரஹ்மானே! அதற்கடுத்த அத்தஹயாத்தின் இருப்பில் கடந்த கட்டுரையில் நாம் எழுதியதைப் போல் அல்லாஹ்வைப் புகழ்ந்து பெருமானார்(ஸல்) அவர்களுக்கு ஸலவாத் ஓதியப்பின் வாழ்வு மற்றும் மரண சோதனை, தஜ்ஜாலின் சோதனை, கப்ரு வேதனை, நரக வேதனையிலிருந்து பாதுகாப்பு கேட்டதன் பின்பும் பாவமன்னிப்புக்கான அடுத்த வாசகங்கள் ஸலாம் கூறி முடிக்கும் வரையிலும் தொடருகிறது. அபூதர்(ரலி)அவர்கள் அல்லாஹ்வின்தூதர்(ஸல்)அவர்களி 'அல்லாஹும்ம இன்னீ ளலம்(த்)து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த ஃபக்ஃபிர்லீ மக்ஃபிர(த்)தன் மின் இந்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்(த்)தல் கஃபூருர் ரஹீம். பொருள்: இறைவா! எனக்கே நான் அதிகம் அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, என்னை மன்னிப்பாயாக! மேலும், எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்புடையோனுமாய் இருக்கிறாய்) என்று கூறுவீராக'என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூபக்ர் (ரலி) நூல்கள்: புகாரீ 834, முஸ்லிம் 4876 மீண்டும்! மீண்டும்! என்று கேட்டப் பின் ஏற்கனவே ஸஜ்தாவில் கேட்டதை வலியுருத்தும் விதமாகவும், ஸஜ்தாவில் கேட்க மறந்ததை மீண்டும் கேட்கும் விதமாகவும் அத்தஹயாத்தின் இருப்பில் ஸலவாத்திற்குப் பிறகு மேற்காணும் பாவமன்னிப்பிற்கடுத்து ஸலாம் கொடுத்து முடிக்கும் வரை கேட்பதற்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அத்தஹிய்யாத் ஓதிய பின்னர்) உங்களுக்கு விருப்பமான துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் துஆச் செய்யுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்கள்: புகாரீ 835,முஸ்லிம் 609 அமைதி தவழச் செய் இறைவா! இத்துடன் முடிந்து விடுகிறதா என்றால்? அது தான் இல்லை! இன்னும் தொடருகிறது, ஸலாம் கொடுத்து முடிந்தப் பிறகு உடனே எழுந்து சென்று விடாமல் மீண்டும் பாவமன்னிப்புக் கேட்டு விட்டு இறைவன் புறத்திலிருந்து ஸலாம் என்னும் அமைதியை கேட்கிறோம். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர், அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறி) மூன்று முறை பாவமன்னிப்புத் தேடுவார்கள். மேலும் அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம், வமின்(க்)கஸ் ஸலாம், தபாரக்(த்)த தல் ஜலாலி வல்இக்ராம் பொருள்: இறைவா!நீ சாந்தியளிப்பவன்.உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது, மகத்துவமும், கண்ணியமும் உடையவனே! நீ பாக்கியமிக்கவன்!)என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) நூல்: முஸ்லிம் 931 நீ தேவையற்றவன், நான் தேவையுடையவன். இறைவன் புறத்திலிருந்து சாந்தி எனும் அமைதியை கேட்டப் பின் அதற்கடுத்து வல்ல ரஹ்மானை அவனுடைய வல்லமைக்கொப்ப புகழப்படும் வாசகத்தைக் கூறி போற்றிப் புகழ்ந்து விட்;டு அவனது அருட்கொடை தடுக்கப்படாமல் நம்மை வந்து சேருவதற்காக பிரார்த்திக்கின்றோம். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃ(த்)தய்(த்)த வலா முஃ(த்)திய லிமா மனஃ(த்)த வலா யன்ஃபவு தல் ஜத்தி மின்(க்)கல் ஜத்து பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவரும் கொடுக்க முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் அளிக்காது) என கடமையான தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி) நூல்கள்: புகாரீ 844, முஸ்லிம் 933 தள்ளாத வயது வரை தள்ளி விடாதே இறைவா! அவனது அருட்கொடையை அடைந்து கொண்டு அதில் கஞ்சத்தனம் செய்யாமலிருப்பதற்கும், மார்க்க அடிப்படையிலும், சொந்தப் பிரச்சனையிலும் கோழைத்தனம் ஏற்படாமல் இருக்கவும், தள்ளாத வயது வரை தள்ளப்பட்டு விடாமல் இருப்பதற்காகவும், சில வலிமை மிக்;க துஆவையும் வல்ல அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். ஏன் என்றால்? கஞ்சத்தனம் அவர் செல்லும் வழியை கடினமாக்குகிறது, கோழைத்தனம் அவரது வாழ்க்கையில் நிம்மதி இழக்கச்செயகிறது, தள்ளாத முதுமை பிறருக்கு சுமையாகிறது. மேற்காணும் எந்த ஒன்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களுக்கு ஏற்படவில்லை என்பது அவர்கள் தொழுகையில் கேட்ட துஆவின் பலன் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் காட்டித் தந்த வழியில் தொழுகையில் பாதுகாப்புத் தேடும் எவரும் மேற்காணும் நிலைக்குத் தள்ளப்பட மாட்டார்கள்;. அல்லாஹ் மிக அறிந்தவன். 'அல்லாஹும்ம இன்னீ அவூதுபி(க்)க மினல் புக்லி, வஅவூதுபி(க்)க மினல் ஜுப்னி, வஅவூதுபி(க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வஅவூது பி(க்)க மின் பித்ன(த்)தித் துன்யா, வஅவூது பி(க்)க மின் அதாபில் கப்ர். பொருள்: இறைவா!உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்புத் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என இறைவனிடம் தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடினார்கள்.அறிவிப்பவர்: சஅத் (ரலி) நூல்: புகாரீ5384, 2822 போற்றிப் புகழ்கிறேன் யா அல்லாஹ்! நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக இறைவனிடம் ஒரு முறை, இரண்டு முறை என்றில்லாமல் தொடர்ந்து கேட்கவேண்டும், கேட்பதில் சடைவடைந்திடக் கூடாது என்பதற்கு தொழுகையின் தொடக்கத்திலிருந்து அது முடியும்வரை பாவமன்னிப்பிற்கான வாசகங்கள் ஏராளமான இடங்களில் இடம் பெற்றிருப்பது உதாரணமாகும். மேற்காணும் பாவமன்னிப்பு, உலக – மறுமை தேவைகளுக்காகப் பிராரத்தித்தப் பின்னர் இறைவனை துதித்துப் போற்றும் தஸ்பீஹூடன் அவரது பாவங்கள் மொத்தமாய் மூட்டை கட்டப்படுவதை தெரிந்தால் எவரும் தொழாமல் இருக்கமாட்டார், தொழச் சென்றால் தஸ்பீஹை ஓதாமல் பள்ளியை விட்டு வெளியேற மாட்டார். 'யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவைகளும், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும், அல்லாஹு அக்பர் என்று 33 தடவைகளும் ஆக மொத்தம் 99 தடவைகள் கூறிவிட்டு100 வதாக லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 939 உயிர் தொண்டை குழியை வந்தடையும் வரை பாவமன்னிப்பும், பிரார்த்தனையும் நிருத்தப்படக்கூடாது. ஏன் என்றால்? எப்பொழுது நிருத்தப்படும் என்று ஷைத்தான் வலையை விரித்துக் காத்துக்கொண்டிருப்பான். அது இரண்டும் நிருத்தப்பட்டு விட்டால் ஷைத்தானின் வலையில் வீழ்வதைத் தவிற வேறு வழி இருக்காது. அவ்வாறு வீழ்ந்து விட்டால் இறுக முடிச்சுக் போட்டு நரகிற்கு விறகாக்கிடுவான். அதிலிருந்தும் அல்லாஹ் நம் அiனைவரையும் காத்தருள் புரிய வேண்டும். இன்று அல்லாஹ்வின் உதவியால் தொழுகையில் ஓதப்படும் அனைத்து வாசகங்களும் தமிழாக்கம் செய்யப்பட்டு விட்டது. பார்க்க hவவி:ஃஃழடெinநித.உழஅஃடிழழமளஃவா எழுதியபடி நாமும், வாசித்தப்படி நீங்களும் அமல் செய்யும் நன்மக்களாக வல்ல அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக! அதிரை ஏ.எம்.பாரூக்
0 comments:
Post a Comment