"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


தொலைக்காட்சிப் பாதிப்பில் சிறுவர்கள்!

1.1.11

தொலைக் காட்சியின் தேவை என்பது இன்று ஓர் அத்தியாவசியமான தகவல் பரிவர்த்தனை சாதனமாகவும் பொழுது போக்கும் கருவியாகவும் மாறிவிட்டது. இன்று TV இல்லாத வீடுகள் இல்லையென்றே கூறலாம்.

ஒரு காலகட்டத்தில் சற்று வசதியான வீட்டில் அக்கம் பக்கமென ஒரு கும்பலே சினிமா, நாடகம் என்று பார்க்க கூடியிருப்பார்கள். சிறுவர்களும் அவர்களுக்குரிய நிகழ்ச்சிகள், மிருகங்களின் சாகசங்கள், கிரிக்கெட் என்று அவற்றினைப் பார்த்து ரசிக்க அடம்பிடித்து பக்கத்து வீடுகளுக்குச் சென்று ஆஜராகி விடுவார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.



வசதியான, நடுத்தர, வறிய குடும்பங்கள் என்று அனைவரினதும் வீடுகளில் TV முக்கிய முக்கிய இடத்தில் அதிகாரம் செலுத்துகிறது. அதிலும் சிறுவர்கள் கைகளில் ரிமோட் கொன்ட்ரோல் தஞ்சமடைந்து விட்டால் பிடுங்குவதே கஷ்டம். இதனால் பெரியவர்கள் அவர்களுக்குரிய நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாத பட்சத்தில் இரண்டு அடியும் போட்டு விடுவார்கள்.



எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் நல்லது, கெட்டதென இரண்டு பக்கங்கள் உள்ளன. ஆனால், சிறுவர்களைப் பொறுத்த மட்டில் அவர்களின் உலகமே ஒரு தனியான, வித்தியாசமான டைப்தான். அதிலும் TV முன்னால் அமர்ந்து விட்டாலோ வெறும் கார்ட்டூன் என்று சொல்வதற்கில்லை. சினிமா, அரைகுறையான பாட்டுக் கூத்து, விரசமான விளம்பரங்கள் என்று எல்லாக் கருமங்களையுமே பார்த்துத் தொலைக்கிறார்கள்.



இன்றையத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான விஷயங்கள் முகம் சுழிக்க வைப்பதாகவே உள்ளன.


குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கக் கூடிய சமாச்சாரங்கள் குறைவு. மத, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைத் தாண்டி விரசம் தலை விரித்தாடுகிறது. வளரும் பிள்ளைகளும் ஒழுக்க நெறிகளைத் தாண்டி ஹொலிவூட், பொலிவூட் என்ற ரேஞ்சுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.


இவர்களின் சிந்தனையோட்டம், மனப்பாதிப்பு, உடல், உளவியல் ரீதியான தாக்கங்கள் மற்றும் பாலியல் ரீதியான நோக்கங்களை ரீவியில் வருவது போன்று யதார்த்தத்தில் நடக்க முயன்று விபரீதத்தில் போய் விடுவதுமுண்டு. இவற்றுக்கு உதாரணமாக அண்மைக் காலங்களில் இடம்பெற்ற சில துர்ப்பாக்கிய சம்பவங்களை நாம் எடுத்துக் கொள்ள முடியும். (ஸ்பைடர்மேன், சுப்பர் மேன்) இப்படிப் பல விடயங்கள் அவர்களைச் சுற்றி வட்டமிடுகின்றன.


வெறுமனே ரீவிதானே பார்க்கிறார்களென்று அஜாக்கிரதையாக இருக்கவும் கூடாது. இவர்களுக்குத்தான் என்ன புரியப் போகிறதென முட்டாள்தனமாக எண்ணி விடவும் கூடாது.


வேலைப்பளு, டென்ஷன் காரணமாக TV யைப் போட்டுக் கொடுத்துவிட்டு அல்லது TV யைப் பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு நிம்மதி என்று நினைத்தால் அது பெரும் தவறு. அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ன பார்க்கிறார்கள், என்ன வீடியோ கெசெட் வைத்திருக்கிறார்கள் என்று தெரியாதளவுக்கு பெற்றவர்களும் மற்றவர்களும் அவரவர் வேலைகளில் மூழ்கியிருப்பார்கள்.


பிள்ளைகளின் எண்ண ஓட்டங்கள் செயற்பாடுகள், உணர்வுகளின் வெளிப்பாடுகள் என்பனவற்றை பெரும்பாலும் பெற்றோர்களாலேயே புரிந்து கொள்ள முடியாமல் திணறுவதுமுண்டு.


தகவல், தொழில்நுட்ப சாதனங்களை விடச் சிறுவர்களின் மூளை மிக விவேகமான கருவியாக இயங்குவதனைக் காணக் கூடியதாகவுள்ளது.


TV யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் கிரிக்கெட் போன்றனவற்றைப் விடாப்பிடியாகப் பார்த்துவிட்டு அடுத்த நாளுக்கான பாடசாலை ஹோம் வேர்க் அல்லது பரீட்சையில் கோட்டை விடுவது அல்லது தரப்படுத்தல் வரிசையில் பின்நோக்கிச் செல்வது போன்ற பின்னடைவுகள் ஏற்படுகின்றன.


கிரிக்கெட் மற்றும் விளையாட்டுகளை எடுத்துக் கொண்டாலும் பார்க்க வேண்டும் விளையாட வேண்டும்தான். ஆனால், அதனையே தொடர்ந்தும் பார்க்கவும் விளையாடவும் அனுமதிக்கக் கூடாது. கல்வியில் கவனம் சிதறி முழுக்க, முழுக்க விளையாட்டின் பக்கமே கவனம் ஈர்க்கப்பட்டுவிடும். இதற்கான முழுப் பொறுப்பையும் பெற்றோரே ஏற்க வேண்டும்.


ஏனெனில், இரக்கம்,செல்லம் இவையே பிள்ளைகளின் பெரிய ஆயுதங்கள். அல்லது கட்டுப்பாட்டை மீறி நடந்து பெற்றோர்களை எரிச்சலடையச் செய்யும் அளவுக்கும் நடக்கும் சிறார்கள்.


TV யில் வரும் பாட்டு, கூத்து, சினிமா, சாகசக் காட்சிகள் போன்ற பல விஷயங்களை கூர்ந்து கவனித்து விட்டு அதனை அப்படியே பின்பற்றிச் செய்து காட்டும் சிறுவர்களும் உள்ளனர். அவற்றின் விளைவுகளை அறியாமல் ஊக்கப்படுத்தும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.


பார்பி பொம்மைகளை வைத்துக் கொண்டு உறங்கும் பிள்ளைகளும் உண்டு. TV யில் வரும் விடயங்கள் போன்றே நடை, உடை பாவனைகளும் இருக்க வேண்டுமென்று கனவுலகில் சஞ்சாரிக்கும் பிள்ளைகளும் உள்ளனர். இது அவர்கள் தவறல்ல. சிறகு முளைக்கும் காலம், பறக்கத் துடிக்கும் வயது இந்த நிலையில், நல்ல விஷயங்களைத் தெரிவு செய்து எடுத்துரைத்து ஊக்கம் கொடுத்து உறுதுணையாகப் பெற்றோர்களே இருக்க வேண்டும்.


சிரிக்கவும் சிந்திக்கவும் அறிவுக்கு நல்ல வேலை கொடுக்கவும் நல்ல கார்டூன்களையும் அறிவு, ஆராய்ச்சி, விஞ்ஞானம், பூகோளவியல் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்க வைப்பதில் தவறில்லை. இவைகள் கல்வி, பொது அறிவு போன்ற இன்னும் பல நல்ல விடங்களை நல்ல சிந்தனையுடன் சீர்தூக்கிப் பார்க்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி:

ஃபாத்திமா நளீரா, வெல்லம்பிட்டிய.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP