கொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை)
5.1.11
புகழனைத்தும் விண்ணையும் மண்ணையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் நம்மையும் படைத்த தூயோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே! எங்கே அமைதி? அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கும் எண்ணற்ற அருட்கொடைகளில் மிகவும் சிறந்ததும், அனைவரும் விரும்புவதும் ‘அமைதி’ என்று சொன்னால் அது மிகையாகாது. காசு கொடுத்து வாங்க முடியாத பொருள் அது. மற்றவர்களை விடுங்கள், அமைதி மார்க்கமாகிய இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றக்கூடிய நம் சமுதாயத்தில் அமைதி இருக்கிறதா? இலட்சங்கள் அலட்சியமாகப் பறக்கும் ஆடம்பரத் திருமணங்கள் மணல் வீடாகக் கலைந்து போகும் அவலம் தினந்தோறும் நடக்கின்றன. இது ஒரு சமுதாயத்தின் அமைதியைக் குறிக்கிறதா? இல்லை! அலங்கோலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. குடும்ப அமைப்பு சீர்குலைந்தால் மொத்த சமுதாயமுமே சீர் குலைந்து போகும். பின் எங்கே நிம்மதி? இந்நிலைக்குப் புற அம்சங்களைக் காரணம் காட்டாமல் நம் தாழ்வுக்கு நாமே காரணம் என்ற பொறுப்புணர்வுடன் எங்கே தவறினோம் நாம்? என்ற சுய அலசலிலும் இந்நிலையை எப்படி சரி செய்வது என்ற ஆரோக்கியமான அணுகுமுறையிலுமே ஈடேற்றம் பெற முடியும். திருமணம் தீனில் ஒரு பகுதி: திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம் என்பது பொது விதி. ஆனால் இஸ்லாம் ஒருபடி மேலே போய் ‘ஒருவன் திருமணம் புரிந்தால் அவன் இறைமார்க்கத்தில் ஒரு பகுதியை நிறைவேற்றி விட்டான். எஞ்சியவற்றில் அவன் இறைவனை அஞ்சி நடந்து கொள்ளட்டும்.’ (பைஹகி) என்று கூறுகிறது. இன்னும் ஒரு நபிமொழி இக்கருத்தை வலியுறுத்துகிறது. ‘திருமணம் என் வழிமுறை (சுன்னத்). என் வழிமுறையைப் புறக்கணித்தவர் எம்மைச் சார்ந்தவர் அல்லர்.’ (இப்னு மாஜா) திருமணத்தால் அமைதி கிடைக்கிறது: ‘அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான். நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக. மேலும் உங்களிடையே அன்பையும் கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன’ (அல்குர்ஆன் 30:21) இந்த வசனத்தைப் படித்தால் மட்டும் போதாது சிந்திக்க வேண்டும்.. குழந்தைகள் தான் திருமண வாழ்வின் பரிசு. அவர்கள் பெற்றோர்களுக்குக் கண்குளிர்ச்சியாகவும், பரபரப்பான வாழ்வில் அமைதி கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இறைவன் அனுமதித்த முறையில் இனவிருத்திக்கும் திருமணமே சிறந்தது என்பதை கீழ்வரும் வசனம் உணர்த்துகிறது. ‘மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்.’ (அல்குர்ஆன் 4:1) கொடுப்பது: கீழே உள்ளவை, நம்பிக்கையாளர்களுக்கு வெளிச்சம் தரக்கூடிய இரு ஒளிகளாகிய குர்ஆன், ஹதீஸ் இவற்றில் ‘கொடுப்பது’ பற்றி உள்ள செய்திகள், கட்டளைகள். ‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை…நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்..’ (அல்குர்ஆன் 33:50) ‘பெண்களை நீங்கள் தீண்டுவதற்க்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்க்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் – அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும். இது நல்லோர் மீது கடமையாகும்.’ (அல்குர்ஆன் 2:236) ‘..அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்…’ (அல்குர்ஆன் 4:24) ‘எந்த நிபந்தனையின் வாயிலாக நீங்கள் பெண்களின் கற்புக்கு உரிமையாளர்களாய் ஆகிறீர்களோ அதுவே மற்றெல்லா நிபந்தனைகளை விட முன்னதாக நிறைவேற்றிட உரிமை பெற்ற நிபந்தனையாகும்.’ (நபிமொழி – புகாரி, முஸ்லிம்) எடுப்பது: கொடுப்பதைப் பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறியுள்ளவற்றைப் பார்த்தோம். ‘எடுப்பது’ என்பதைப் பற்றி, அதாவது திருமணம் செய்யப் போகும் பெண்ணிடமிருந்தோ அவளுடைய பெற்றோரிடமிருந்தோ ‘எடுப்பது’ பற்றி ஏதாவது இருக்கிறதா என்று குர்ஆனின் 114 அத்தியாயத்திலும் தேடினாலும் ஒரு வசனம் கூட கிடைக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது, தோட்டம், திர்ஹம், தங்கம் இவை மட்டுமல்லாமல் இரும்பு மோதிரம், கேடயம் ஏன் மனப்பாடம் செய்த சூராவைக் கூட மஹராக ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பவங்களைப் பார்க்கிறோம். ஆனால் பெண் இத்தனை பவுன் நகை, சீர் வரிசை, பலகாரங்கள், இத்தியாதிகள் இவற்றுடன் கணவன் வீட்டுக்குச் சென்றாள் என்று எந்தக் குறிப்பும் இல்லை. ‘எடுப்பது’ எப்படி வந்தது? பெண் வீட்டாரிடமிருந்து வாங்குவது என்பது மற்ற சமுதாயத்தினரின் செயல். பெண் என்றால் சீதனத்துடன் தான் கணவன் வீட்டிற்குச் செல்ல வேண்டும், மாப்பிள்ளைக்கு வரதட்சணை தர வேண்டும் என்பதெல்லாம் ‘அவர்கள்’ சம்பிரதாயங்கள். இறைவேதத்தையும், நபிவழியையும் முதுகுக்குப் பின்னால் தூக்கிப் போட்டு விட்டு ‘அவர்களை’ப் பின்பற்ற ஆரம்பித்து விட்டோம் நாம். ஒரு பேச்சாளர் ‘இப்போது நடக்கும் திருமணங்கள் வியாபாரம் போல் ஆகிவிட்டன.’ என்று குறிப்பிட்டார். இது என்னைச் சிந்திக்க வைத்தது – வியாபாரம் என்றால் பணத்தைக் கொடுத்து ஒரு பொருளை வாங்குவது அல்லது பொருளை விற்று பணத்தைப் பெறுவது. சரி, நம் கையை விட்டுப் பணம் போகும் போது பொருள் நம் கைக்கு வர வேண்டும் – அது தான் வியாபாரம். ஆனால், திருமணத்தில் பணம் நம் கையை விட்டுப் போகிறது, பெண்ணும் போகிறாள், ஆனால், நம் கைக்கு எதுவும் வருவதில்லை. இது எந்த வியாபார விதிக்கும் உட்பட்டதாக இல்லையே.. மோசடி வியாபாரமாக அல்லவா இருக்கிறது! சந்தையில் மாடு விற்பவன் கூட மாட்டைக் கொடுத்து விட்டுப் பணத்தை எண்ணி வாங்கிக் கொள்கிறான். ஆனால் பெண்ணைப் பெற்றவனோ, பெண்ணையும் கொடுத்து, பொன்னையும் கொடுத்து, சீர் என்ற பெயரில் புழங்குவதற்கு சாமான்களையும் கொடுத்து, பிறகு பணத்தையும் கொடுக்கிறான்.. நம் பெண்கள் மாட்டைவிடவா கேவலமாகி விட்டார்கள்? இதை பெண்களும் யோசிக்க வேண்டிய விஷயம்.. பொன்னோடும், பொருளோடும் மாமியார் வீட்டுக்குப் போவது தான் பெருமை என்ற எண்ணத்தை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனோ தெரியவில்லை நம் சகோதரர்களுக்கு தவ்ஹீத் சிந்தனை திருமணமான பிறகு தான் வருகிறது. வாங்கிய வரதட்சணையைத் திருப்பிக் கொடுக்கிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் இந்த விழிப்புணர்வு திருமணத்திற்கு முன்பே வந்திருந்தால் வரதட்சணை கொடுக்க வசதியற்ற பெண்ணுக்கு வாழ்வு கிடைத்திருக்கும். மறைமுகமாக எடுப்பது: வரதட்சணை என்று ரொக்கமாக வாங்காவிட்டால் தாங்கள் நபிவழியில் திருமணம் புரிந்ததாக சிலர் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள். மார்க்கத்தில் இல்லாத நூதன விழாக்களால் பெண் வீட்டிற்கு எத்தனை வீண் செலவுகள்! பெண் பார்த்தல், நிச்சயதார்த்தம், மருதாணி விழா, ஆடம்பரமான மண்டபம் அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நிக்காஹ் விருந்து, மறு வீடு என்று விருந்துக்கு மேல் விருந்தாகவும், பலகார வகைகள், சீர் என்று வித விதமான செலவினங்கள். கட்டில், பீரோ, ஏசி, ஃபிரிஜ் என்பதெல்லாம் காலத்தின் கட்டாயமாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கம் விற்கும் விலையில் படித்த மாப்பிள்ளை என்றால் குறைந்த பட்சம் ஐம்பது பவுன் என்பது எழுதாத சட்டமாகி விட்டது. இத்தனையையும் கேட்டு வாங்கினால் தானே தவறு? கேட்காமலேயே வரக்கூடிய இடமாகப் போய் பெண் எடுத்தால் வம்பில்லையே.. ‘வீண் செலவு செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள்’ (அல்குர்ஆன் 17:27) என்ற திருவசனம் இவர்களின் மனதில் பதியவில்லையா? அல்லது, ‘வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.’ (அல்குர்ஆன் 7:21) என்ற வசனத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்களா? அல்லது, ‘குறைந்த செலவில் குறைந்த சிரமத்துடன் செய்யப்படும் திருமண நிகழ்ச்சியே சிறந்ததாகும்.’ என்ற நபிமொழியைக் காலத்துக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கி விட்டார்களா?!! விளைவுகள்: இன்றைய திருமணங்கள் இறையச்சத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா? அல்லாஹ் திருமறையில், வட்டியைப் பற்றி, ‘யார் வட்டி வாங்கித் தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்டவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாக) எழ மாட்டான். இதற்குக் காரணம், அவர்கள் ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கி இருக்கிறான்…’ (அல்குர்ஆன் 2:275) என்றும் ‘ஈமான் கொண்டோரே, இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.’(அல்குர்ஆன் 3:130) என்றும் கூறி நம்மைக் கடுமையாக எச்சரித்திருக்கிறான். இருந்தாலும், பலர் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் எல்.ஐ.சி.இன் திருமகள் திருமணத் திட்டம் என்று வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளில் சேமிக்கத் தொடங்கி விடுகின்றனர். காரணம், அப்படி சேர்க்கும் தொகை அவள் திருமண வயதில் வட்டியோடு குட்டி போட்டு பெருந்தொகையாக இருக்கும். இப்படி ஹராமாக சேர்த்த பணத்தையோ, அல்லது வட்டிக்கு கடன்பட்டோ தான் கைக்கூலியாகவும், நகையாகவும், சீராகவும், கொடுக்கிறார்கள். நினைத்துப் பார்த்தால் அருவருப்பாக இல்லை? ஒருவன், ஹராமான வழியில் பொருளீட்ட காரணமாயிருப்பது யார் என்று யோசித்துப் பாருங்கள். மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சிக் கொள்ளுங்கள். ஹஜ் செய்வது இஸ்லாத்தில் கட்டாயக்கடமை. அதாவது பொருள் வசதியும், உடல்வலிமையும் உள்ளவர்கள் செய்ய வேண்டிய கடமை. ஆனால், உடலில் வலு இருந்தும்;, கையில் வழிச்செலவுக்குப் போதுமான பணம் இருந்தும் புனித பயணத்தைத் தள்ளிப் போட அவர்கள் காரணம் காட்டுவது திருமணத்திற்குப் பெண் இருக்கிறாள். அவளுடைய திருமணக் கடமையை முடித்த பின்பே ஹஜ் செய்ய வேண்டும் என்பதை மார்க்கச் சட்டமாக ஆக்கி விட்டார்கள். மரணம் முந்திக் கொண்டால் ஹஜ் செய்ய முடியாமலே ஆகிவிடும். இதற்கு யார் காரணம் என்பதை சிந்திக்க கடமைபட்டுள்ளோம். ஏழ்மை அல்லது கொள்கைப் பிடிப்பின் காரணமாகவோ வரதட்சணை கொடுக்க முடியாத வீட்டுப் பெண்களில் சிலர் மாற்று மதத்தவர்களைக் கூட மணந்து வாழ்கிறார்கள். ‘இணை வைக்கும் ஒருவனை மணத்தல் கூடாது’ என்பது இறை கட்டளை. அதை மீற காரணம் யார்? அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தில் பிறந்துள்ள நாம், எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! ஆனால், துரதிரூஷ்டவசமாக நாம் அனாச்சாரங்களால் அதை எவ்வளவு தூரம் கறைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கறைபடுத்திக் கொண்டிருக்கிறோமே இது நியாயமா? அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்துள்ள இஸ்லாமியத் திருமணம் வீண் சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாத எளிய, அழகிய வாழ்க்கை ஒப்பந்தம். பிறப்பிலிருந்து இறப்பு வரை குர்ஆனும், நபிவழியும் சொல்கிறபடி வாழக் கடமைப்பட்டவர்கள் நாம். மாற்றுமதத்தினரின் வீண் சம்பிரதாயங்களை பின்பற்ற ஆரம்பித்ததனால் நம் சமுதாயத்தில் எத்தனைக் குழப்பங்கள்! பெண் தேடும் போது, தன்னை விட உயரமான பெண்ணை மணக்க ஒரு ஆண் விரும்புவதில்லை. தன்னை விட உயரம் குறைந்த பெண்ணையே மணக்க விரும்புகிறான். மனோதத்துவரீதியாகப் பார்த்தால், இதற்குக் காரணம், தன் மனைவியை விட தான் உயர்ந்திருக்க வேண்டும், அவள் அன்னாந்து பார்க்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான். உடலளவில் மட்டும் உயர்ந்திருந்தால் போதுமா? உள்ளத்தால் உயருதல் தான் மனிதனுக்கு அழகு. ஒரு பெண்ணும் தன் கணவன் அப்படி உள்ளத்தால் உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவாள். அப்படிப்பட்டவனையே மதிப்பாள். இஸ்லாம் காட்டும் வழிபடி, மஹர் கொடுத்து மணம் முடித்து, உங்களால் இயன்ற அளவு வலிமா விருந்து கொடுத்து உயர்ந்து காட்டுங்கள். உங்கள் இல்லத்திற்குத் தேவையானதை உங்கள் உழைப்பில் வாங்குவது தான் பெருமை. இன்று எந்த லாபமும் கருதாமல் ஒரு பெண்ணை மணந்தால், அடுத்த தலைமுறையும் திருந்தும். இந்தப் ஈனப் பழக்கம் வேரோடு அழிந்து விடும். நம் உடலை விட்டு உயிர் பிரிந்த வினாடியே நாம் சொந்தம் என்று சொல்லிக் கொள்ளும் எதுவும் நமக்கு சொந்தம் இல்லாமல் போய்விடும். கபன் துணியைத் தவிர நம்முடைய எந்தப் பொருளும் நம்முடன் வரப்போவதில்லை என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ‘எடுப்பது’ என்பது மாற்றார் வழி.. ‘கொடுப்பது’ மட்டுமே நம் வழி! நன்றி: சுவனம்.காம்
1 comments:
Assalamu Alaikum Brother.This is Mahir Mohideen from www.saynotodowry.tk I thank you for visiting my site and join my site as a follower. You are doing a great job. first time I visit your site and it is amazing. keep up the good work.
I am posting new stuff about dowry whenever possible and you can visit any time and enjoy what I put there.
Please dont forget to watch my short films about dowry on the short film section of my site both in Tamil and English.
Thank you
Post a Comment