"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


ஆபாச எதிர்ப்புப் பிரச்சாரம்

31.5.11

ஒரு மனிதனை உயர்ந்த கண்ணியத்திற்கு உயர்த்துவது அவனிடமுள்ள ஒழுக்க மாண்புகளே!


ஆனால் இன்று உலகளவில் கலாச்சாரம் என்ற பெயரில் இத்தகைய ஒழுக்க மாண்புகள் உடைத்தெறியப்பட்டு வருகிறது. அரை0குறை ஆடைகளும், ஒழுக்கக் கட்டுப்பாடின்மைகளும், இதனை அங்கீகரிக்கும் சமூகம், அரசும் என்று சமூகம் சீரழிவை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது.


ஆபாசத்தை முன்னிறுத்தி சர்வ சாதாரணமாக இன்று பல ஆடை தயாரிப்புகள், விளம்பரங்கள், திரைப்படங்கள், பத்திரிகைகள் எனப் பலர் தங்கள் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகின்றார்கள். அரசோ இத்தகைய ஆபாசத்திற்கு எதிராக மக்களை உருவாக்குவதை விட்டு விட்டு ஆபாசத்தினால் எழும் தீமைகளை எவ்வாறு தடுப்பது என்பதிலேயே கவனம் செலுத்துகிறது.


மக்களும் ஒரு மனிதனை ஒழுக்கத்தைக் கொண்டு மதிப்பிடாமல் வெறுமனே பணத்தைக் கொண்டு மதிப்பீடு செய்யும் நிலையில் இருக்கிறார்கள். இத்தகைய நடைமுறைகளின் விளைவால் மென்மேலும் இத்தகைய ஆபாசங்கள் வளர்ந்து பல தீமைகளுக்கு வழிவகுத்துள்ளது.


ஈவ் டிசிங், சிறுமிகள் உட்பட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுதல், விபச்சாரம், கள்ளத் தொடர்பு, அதன் மூலம் பிறக்கும் குழந்தைகள், இதனால் கணவன் அல்லது மனைவி கொலை செய்யப்படுதல், விரக்தி, தற்கொலை, விவாகரத்து போன்ற பல்வேறு சமூகத் தீமைகள் இன்று அங்கிங்கினாதபடி எங்கும் பரவி வருகின்றன.


இந்நிலையிலிருந்து சமூகம் மீள வேண்டுமெனில் ஆபாசத்தின் ஊற்றாகிய பார்வையிலிருந்து தொடங்கி எண்ணம், சிந்தனை, பேச்சு, செயல்பாடு போன்ற அனைத்திலிருந்தும் மீள வேண்டும்.


ஆபாசப் பார்வைகளே தீய எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இத்தீய எண்ணம் மன ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஊசலாட்டம் தீய செயல்களுக்கு வடிவம் கொடுக்கிறது. எனவே ஆபாசத்தை ஒழிக்க பார்வையிலிருந்து ஆரம்பித்து தொடர்ந்து ஆபாசத்தின் பல தீய முகங்களை விட்டு விலக வேண்டும்.



எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்:


(நபியே!) முஃமின்கனான (நம்பிக்கையாளர்கள்) ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (திருக்குர்ஆன் 42:30)


இத்தகைய ஆபாசத்தினால் குடும்ப அமைப்பு சீரழிகின்றது. கணவன்-மனைவியிடையே உள்ள பிணைப்பு பலகீனப்படுகிறது.



இத்தகைய குடும்பங்களில் வளரும் குழந்தைகள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகிறார்கள். பெரும்பாலும் இத்தகைய குழந்தைகள் மற்றும் தகாத உறவில் பிறந்த குழந்தைகள் பிற்காலத்தில் பல சிறிய குற்றங்களிலிருந்து பெரும் குற்றங்கள் வரை செய்கிறார்கள்.


எனவே இத்தகைய ஆபாசம் என்ற சமூகத் தீமையை ஒழிக்கும் முயற்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஜூன் 1 முதல் ஜூன் 7 வரை ஆபாசத்திற்கெதிரான பிரச்சாரத்தை செய்ய உள்ளது.



ஆபாசத்தை ஒழித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்.
மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு மக்களை ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து மக்களை விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றியாளர்கள். (திருக்குர்ஆன் 3.104)

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP