இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் தடையைமீறித் தொடரும் எதிர்ப்புப் பேரணிகள்
27.6.10
ரமல்லா – கடந்த வெள்ளிக்கிழமை (25. 06. 2010) மேற்குக்கரைக் கிராமங்களில் இடம்பெற்ற இஸ்ரேலிய பிரிவினைச் சுவருக்கெதிரான அமைதிப் பேரணிகள்மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கடும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதல்களின்போது பேரணியில் கலந்துகொண்ட பொதுமக்களில் அனேகர் படுகாயமுற்றதோடு மேலும் பலர் மீச்சுத் திணறலுக்கு ஆளாயினர். இஸ்ரேலிய பிரிவினைச் சுவருக்கெதிராக பிளின் கிராமத்தில் இடம்பெற்ற அமைதிப் பேரணியின்போது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் இடையில் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டும் கிரனைடுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை எறிந்தும் கடும் தாக்குதல் நடாத்தியதில் பொதுமக்களில் ஒருவர் படுகாயமடைந்நதோடு, இன்னும் பலர் மிகக் கடுமையான மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியுள்ளனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட கடுமையான துப்பாக்கிப் பிரயோகத்தின் விளைவாக மேற்படி கிராமத்தின் விவசாய நிலங்கள் தீப்பற்றிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. மேற்குக் கரையிலும் ஜெரூசலத்திலும் உள்ள சுதேசிகளான பலஸ்தீனர்களை வெளியேற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் அநீதியான கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சுலோகங்களை முழங்கியவாறு பேரணியினர் தமது பேரணியை முன்னெடுத்துச் சென்றனர். நிளின் கிராமத்தில் இடம்பெற்ற அமைதிப் பேரணியில் கலந்துகொண்ட வெளிநாட்டுச் சமாதானச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சுவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பதாதைகளையும் பலஸ்தீன் கொடியையும் ஏந்திச் சென்றதோடு, கடந்த வாரம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான ஏராளமான ஒலிவ மரங்களை வெட்டிச் சாய்த்த அடாவடித்தனத்துக்கும் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். அமைதியாக முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்த பேரணியை இடைமறித்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கண்ணீர்புகைக் குண்டுகளையும் கிரனைட்டுகளையும் எறிந்ததையடுத்து பேரணியாளர்களுக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்குமிடையில் மோதல் வெடித்தது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சுவருக்குத் தமது எதிர்ப்பை வெளிக்காட்டுமுகமாக ரமல்லாவின் நபி ஸாலிஹ், பெதலேஹேமின் வதீ ரஹல், மஸாராஹ் முதலான கிராமங்களில் இடம்பெற்ற அமைதிப் பேரணிகளும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் கடும் தாக்குதல்களுக்குள்ளாயின என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment