விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதிர் !
21.10.10
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருச்சபையில் ‘மாயிஸ்’ என்ற தோழர் வந்து, தான் ஒரு பெண்ணுடன் தவறான முறையில் நடந்து கொண்டதாகச் சொன்னார். அவரின் சொல்லை நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறக்கணித்தவர்களாக இருந்தார்கள். எனவே அவர் மீண்டும் மீண்டும் சொன்னார். நான்கு தடவை சொல்லி முடித்தார். அப்பொழுதும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதுவும் பேசவில்லை. ஐந்தாவது முறை அவர் சொல்லும்போது அவரிடம் ‘நீர் அவளுடன் உடலுறவு கொண்டீரா?’ என்று கேட்டார்கள். ‘ஆம்!’ என்றார் அவர். மறுபடியும் ‘ஆம்!’ என்றார் அவர். அப்பொழுதும் அவரை குற்றவாளி என்று ஒப்ப பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மனம் வரவில்லை. மேலும் தொடர்ந்து பல கேள்விகள் கேட்டார்கள். ‘ஆம்!’ என்றே மறுபடியும் அவர் கூறினார்.
‘இவ்வாறு சொல்வதன் மூலம் உமது நோக்கம் யாது?’ என்று இறுதியாகக் கேட்டார்கள்.
தாம் செய்த குற்றத்தை தாமே மனமுவந்து விண்ணப்பித்து, தண்டனையை ஏற்றுக்கொள்ள முன்வந்து விட்ட பிறகு வேறு வழியின்றி அவருக்கு விபச்சாரத்திற்குரிய தண்டனையை நிறைவேற்ற அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆணையிட்டார்கள். அதன்படி நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தோழர் இருவர் பேசிக் கொண்டிருப்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செவிகளில் விழுகிறது. ஒருவர் சொல்கிறார், ‘பார்த்தீரா அவரை! அல்லாஹ்வே அவரது குற்றத்தை மறைத்து விட்டான்.(வேறு யாரும் அவர் செய்ததை காணவில்லை) எனினும் அவர் மனம் விடவில்லை. தாம் நடந்து கொண்டதை பகிரங்கமாக எடுத்துக் கூறியதால் இப்போது நாயை அடிப்பது போல அடித்து சாகடிக்கப்பட்டார்’ என்று பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றும் பேசாமல் மவுனமாக இருந்து விட்டார்கள்.
அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமைதியாக அவர்களிடம், ''நீங்களிருவரும் சற்று முன்னர் உங்களின் சகோதரரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தது, அந்த கழுதையின் பிணத்தை திண்பதை விடவும் மிகக் கொடியதாகும். எனது ஆன்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது அணையாக இப்பொழுது அவர் (விபச்சாரம் செய்ததற்குப் பரிகாரமாக கொல்லப்பட்டவர்) சுவனத்தின் ஆறுகளில் மூழ்கி ஆனந்தித்துக் கொண்டிருக்கிறார்'' என்று கூறினார்கள்.
சகோதர சகோதரிகளே!
விபச்சாரத்திற்குரிய தண்டனை பெற்றவர் உலகின் கண்களுக்கு கேவலமாகவும், இழிவாகவும் காட்சியளிக்கலாம். ஆனால், அவர் தவறிலிருந்து தூய்மை பெற்று விடுகின்றார். மரணத்திற்குப்பின் சுவர்க்கவாசியாகி விடுகிறார் என்பது இங்கே ஒரு முக்கியமான விஷயமாகும்.
அடுத்து, ஒருவரைப்பற்றி இழிவாகப் பேசுவது கழுதையின் அழுகிப்போன பிணத்தை திண்பதைவிட கேடுகெட்டதாகும். இதை நாம் புரிந்து திருந்துவோமா?
உன் சகோதரன் அருகில் இல்லாதபோது அவன் கேள்விப்பட்டால் வருந்தக்கூடிய செய்திகளைப் பேசுவதுதான் ''புறம் என்பது'' எனப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
கழுதையின் பிணத்தைவிட மோசமான உணவைத் திண்ணுவதற்கு எவரேனும் விரும்புவோமா என்ன! எனவே இனியாவது தவ்பா செய்து, புறம் மற்றும் அவதூறு பேசுவதை நிறுத்திக் கொள்வோம். நமது நாவைப் பேணுவோம்! நல்வழி நடப்போம். அல்லாஹ் அருள்புரிவானாக, ஆமீன்.
0 comments:
Post a Comment