இஸ்லாமியர்கள் குறித்து ரகசிய சர்வே : 5 பெண்களிடம் போலீசார் விசாரணை
6.11.10
குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய சமூகத்தினரிடம், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ரகசிய சர்வே நடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து, ஐந்து பெண்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரிமடம் காலனி இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி. இங்கு அக்டோபர் 2ம் தேதி ஐந்து பெண்கள் சென்று இஸ்லாமிய பெண்களிடம் சர்வே நடத்தினர். அவர்கள் அப்பெண்கள், ஆண்கள் என பலரிடமும் வினாத்தாளில் இருந்த 90க்கும் மேற்பட்ட வினாக்களுக்கு விடை தேடினர். அதில், "ஒசாமா பின்லாடனை நீங்கள் விரும்புகிறீர்களா?' "நீங்கள் பர்தா (இஸ்லாமிய பெண்கள் அணியும் சம்பிரதாய உடை) அணிவீர்களா?' போன்ற இஸ்லாமிய சமுதாயம் சம்பந்தமான வினாக்களைக் கேட்டனர். அங்கிருந்த ஏழைப் பெண்களுக்கு அவர்கள் எதற்கு இதுபோன்ற கேள்விகள் கேட்கின்றனர் என தெரியாமல் பதிலளித்துள்ளனர். சர்வேக்காக வந்த பெண்கள் அப்பகுதியில் வசிக்கும் நாசர் என்பவரது வீட்டுக்கும் சென்றனர். அங்கு அப்பெண்களிடம் நாசர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார். அதற்கு அப்பெண்கள் சரிவர பதில் சொல்லவில்லை. இதனால் அப்பெண்கள் மீது சந்தேகம் கொண்ட அவர் அப்பெண்களை தனது வீட்டில் சிறை வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் அப்பெண்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்பெண்கள் டில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டெய்லர் நெல்சன் சோப்ரஸ் இந்தியா நிறுவனத்தின் கொச்சி கிளையில் இருந்து அனுப்பப்பட்டவர்கள் என்பதும், அவர்களுக்கு ஒரு சர்வேக்கு 30 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுவதும் தெரிந்தது. அப்பெண்கள் அளித்த விலாசத்தில் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், டில்லி நிறுவனம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் இருந்து செயல்படும் பிரின்ஸ்டன் சர்வே ரிசர்ச் அசோசியேட்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திற்காக இந்த சர்வே பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுபோல், டில்லி, ஐதராபாத் நகரங்களிலும் சர்வே நடந்துள்ளதாகவும் தெரிந்தது. விசாரணைக்குப் பின் அப்பெண்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் போலீசார் விசாரணை, பொதுமக்கள் எதிர்ப்பு ஆகியவை காரணமாக கேரள மாநிலத்தின் பிற பகுதிகளில் நடத்தப்பட இருந்த இதுபோன்ற சர்வேக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுபோன்ற சர்வே நடந்து வருவதால், இதுகுறித்து மத்திய விசாரணை ஏஜன்சிகள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி, ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி விட்டதாக, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment