இளம் பெண் இஷ்ரத் கொலை வழக்கை எஸ்ஐடி விசாரிக்கத் தடை கோரிய குஜராத் அரசு
12.11.10
இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் அகமதாபாத் அருகே சுட்டுக் கொல்லப்பட்டனர். நான்கு பேரும் தீவிரவாதிகள் என குஜராத் அரசு தெரிவித்தது. ஆனால் இவர்கள் நான்கு பேரும் வேண்டும் என்றே போலியான என்கெளன்டரில் கொல்லப்பட்டதாக இஷ்ரத்தின் தாயார் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் இஷ்ரத்தின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் இஷ்ரத் கொலை வழக்கை விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுப் படையை அமைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.
இதை விசாரித்த நீதிபதிகள் சுபாஷன் ரெட்டி, நிஜ்ஜார் ஆகியோர்அடங்கிய பெஞ்ச், குஜராத் அரசின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.
குஜராத் அரசு ஒரு எஸ்ஐடியை அமைத்திருந்தாலும், அதன் விசாரணை சந்தேகத்திற்குரியதாக இருந்தால் புதிய விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட கோர்ட்டுகளுக்கு அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தை எப்படி ஒரு மாநில அரசு கேள்வி கேட்க முடியும். குஜராத் அரசின் கோரிக்கை வியப்பாக உள்ளது.
எனவே குஜராத் உயர்நீதிமன்றம், புதிய எஸ்ஐடியை அமைத்து உத்தரவிட்டிருப்பதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை என்று உத்தரவில் கூறியிருந்தனர்.
ஏற்கனவே கோத்ரா கலவரம், சோராபுதீன் போலி என்கெளன்டர் என பெரும் சிக்கலில் உள்ள குஜராத் அரசுக்கு தற்போது இஷ்ரத் ஜஹான் வழக்கின் மூலம் மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment