சாபம் விட்டு கதறிய ஊனமுற்ற தம்பதி
12.1.11
ராமநாதபுரம் சின்னகடை தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் சாந்தி. ஆதரவற்ற இருவரும் மாற்றுத் திறனாளிகள். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தனர். மதம் மாறிய இவர்கள், தங்கள் பெயரை அப்துல் ரஹிம், ஷப்ராபானு என மாற்றி, ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் குடியேறினர். ரஹிம் சைக்கிள் மெக்கானிக் வேலையும், பானு தையல் வேலையும் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பின் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர். இதுவரை கிடைக்கவில்லை. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தொடர்ந்து தவழ்ந்து வந்து முறையிட்டனர். நேற்று குழந்தையுடன் வந்த தம்பதிக்கு, அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் கொதித்த இருவரும், கதறி அழுதபடி, மனவேதனையுடன் அதிகாரிகளுக்கு சாபம் விட்டு, அங்கிருந்து தவழ்ந்தபடி வெளியேறினர். இச்சம்பவத்தைப் பார்த்து மனு அளிக்க வரிசையில் நின்றவர்கள் மனவேதனை அடைந்தனர். அப்துல் ரஹிம் கூறியதாவது: ஓட்டு போடுவதற்கு மட்டும் காரில் வைத்து ராமநாதபுரம் அழைத்து வருகின்றனர். ரேஷன் கார்டு கேட்டால் ஆண்டு கணக்கில் அலைக்கழிக்கின்றனர். 2000 ரூபாய் கொடுத்தால் இரண்டு நாளில் ரேஷன் கார்டு தருவதாக இடைத்தரகர்கள் பேரம் பேசுகின்றனர். மனிதாபிமானம் செத்துவிட்டது. இனி இவர்களிடம் முறையிடப் போவதில்லை. இவ்வாறு அப்துல் ரஹிம் கூறினார்.
0 comments:
Post a Comment