மனதோடு மனதாய் - இரண்டாவது உமரின் இறையுணர்வு!
3.3.11
‘‘மக்களுக்கு நல்லவைகளைச் செய்யவே இறைவன் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராக அனுப்பினான். அவர்களைத் தண்டிப்பதற்காக அல்ல. தடையில்லாமல் ஓடும் ஒரு நதியை அவர்கள் வெட்டிச் சென்றார்கள். எல்லோரும் சமமாக அதனைப் பயன்படுத்துவதற்காக அதனை விட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பிறகு ஒருவர் அதிகாரமேற்றார்.
அவர் அந்த நதியில் கை வைக்கவில்லை. பின்னர் மற்றொருவர் வந்தார். அவரும் அந்த நதியின் ஓட்டத்தில் தடை ஏற்படுத்தவில்லை. அதன் பின் வந்தவர் சிறிய ஓடைகள் வெட்டி அந்த நதியைப் பிரித்து விட்டார். இப்பொழுது அந்த நதி வற்றிப் போயிருக்கிறது. இப்பொழுது அதில் ஒரு துளி கூட தண்ணீர் இல்லை.
இது சரியில்லை. எல்லா ஓடைகளும் தடுத்து நிறுத்தப்படவேண்டும். தண்ணீர் பழைய மாதிரி நதியில் ஓட வேண்டும். அதுவரை எனக்கு ஓய்வில்லை.’’
இவ்வளவையும் சொல்லி முடிப்பதற்குள் உமர் பின் அப்துல் அஸீஸின் முகம் சிவந்து விட்டது. தன்னுடைய தந்தையின் சகோதரியுடன் பேசிக்கொண்டிருந்தார்.
ஒரு புகாரோடு வந்திருந்தார் மாமி. அது மாமியின் சொந்தப் புகார் அல்ல. கலீஃபா உமர் இப்னு அப்துல் அஸீஸின் அமவீ குடும்பப் பிரமுகர்கள் கொடுத்து விட்ட புகார் அது. அவர்களின் உரிமைகளில் கலீஃபா கை வைக்கக் கூடாது. ஆட்சி பீடத்திலிருந்து காலாகாலமாய் வந்து கொண்டிருந்த பலன்கள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதே அந்தப் புகார். உமர் இப்னு அப்துல் அஸீஸின் ஆட்சி சீர்திருத்தங்களின் காரணமாக அவர்களது வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.
உமர் இதனை எதிர்பார்த்திருந்தார். தேனீக் கூட்டில் கை வைத்திருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இஸ்லாத்தின் கண்ணியமே நீதியிலும், சமத்துவத்திலும்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து அவற்றைத் திரும்ப நிலைநிறுத்தும் முயற்சியில்தான் உமர் ஈடுபட்டார்.
தன்னிலிருந்து அதனைத் தொடங்கினார் உமர். விலையுயர்ந்த ஆடம்பர ஆடைகளை உதறித் தள்ளினார். அதற்குப் பதிலாக எளிமையான ஆடைகளை அணிந்தார். வாகனங்களையும், வாசனைத் திரவியங்களையும், ஆடம்பரப் பொருட்களையும் கடைத் தெருவில் விற்றார். அமவீ கலீஃபாக்கள் வசித்துக்கொண்டிருந்த அரண்மனை போன்ற வீட்டை விட்டு வெளியேறினார்.
சிறியதொரு குடிலில் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். தன் முன்னோர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்து கொண்டு செய்த அத்தனை தவறுகளையும் திருத்துவதற்கு உமர் முயற்சி செய்தார். பொதுப் பணத்தை வீண் விரயம் செய்வதைத் தடுத்து நிறுத்தினார். கலீஃபாக்களின் குடும்பங்கள் கைப்பற்றி வைத்த பொதுச் சொத்துகளைத் திரும்பப் பெற உத்தரவிட்டார்.
அதிகார மையங்களை அண்டிப் பிழைத்துக்கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டினார். அரண்மனைக் கவிஞர்களையும், தேவைக்கதிகமான சேவகர்களையும் வீட்டுக்கு அனுப்பினார். தங்கத்தாலான சிம்மாசனங்களையும், முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜ கிரீடங்களையும் விற்று வந்த பணத்தை பைத்துல் மாலில் சேர்த்தார். மாதா மாதம் பைத்துல் மாலிலிருந்து நிச்சயிக்கப்பட்ட ஒரு தொகையை கலீஃபாக்களின் அமவீ குடும்பத்தார் பெற்று வந்தனர். உமர் இப்னு அப்துல் அஸீஸ் அதனைத் தொலைத்துக் கட்டினார்.
பணம் படைத்தவர்களிடமிருந்து வரி வசூல் செய்து வறியவர்களுக்கு வாரித் தரும் அண்ணலாரின் அழகிய நடைமுறை அங்கே மறைந்து போயிருந்தது. நேர்மாறாக, வறியவரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டு பணம் படைத்தவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது நவீன பிரபுக்களால். உமர் அதனைத் தடுத்து நிறுத்தினார்.
இப்பொழுது புகார் வந்திருக்கிறது. உமரின் தந்தையின் சகோதரிதான் புகார் தந்தவர்களின் பிரதிநிதி. தன்னுடைய நிலைப்பாட்டை உமர் ஆணித்தரமாக நியாயப்படுத்திப் பேசினார். அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த பொருளாதார, சமூக நடைமுறைகளையும், பின்னர் அவை எவ்வாறு மாறிப் போனது என்பதனையும் அவருடைய மாமி புரியும்படி எளிமையாக எடுத்துச் சொன்னார்.
‘‘என் குடும்பத்தாரின் ஒரு உரிமையைக் கூட நான் பறித்திடவில்லை. தகுதியில்லாததை அவர்கள் மேல் திணித்திடவும் இல்லை என்பதுதான் உண்மை’’ என்றார் உமர்.
இவையனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த மாமி இவ்வாறு கூறினார் : ‘‘அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டதை நான் கேட்டேன்.
அவர்களெல்லாம் ஒரு நாள் உனக்கெதிராகத் திரும்பிடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன்.’’
உமர் இதனைக் கேட்டு பாய்ந்தெழுந்தார். கரகரத்த குரலில் இவ்வாறு கர்ஜித்தார்:
‘‘இறுதித் தீர்ப்பு நாளை விட மற்றொரு நாளுக்காக நான் அஞ்ச வேண்டும் என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்? அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிப்பதுதான் மிகப் பெரிய காரியம்!’’
இரண்டாம் உமரின் இறையுணர்வைக் கண்டு மலைத்து நின்றார் அந்தப் பெண்மணி.
மூலம் :
தேஜஸ் மலையாள நாளிதழ்
தமிழில் : எம்.எஸ்.அப்துல் ஹமீது
நன்றி:
விடியல் வெள்ளி மாத இதழ்
0 comments:
Post a Comment