"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


இசுலாமியர் நிறைந்துள்ள தொகுதியான கடையநல்லூர் யாருக்கு? -அலசல்!

25.3.11

கடையநல்லூர் தொகுதி இசுலாமியர்கள் அதிகம் நிறைந்துள்ள தொகுதியாகும். இங்குள்ள இசுலாமியர்கள் பலர் துபாய், மஸ்கட், பஹ்ரைன், சவுதி போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று வருமானம் ஈட்டுகின்றனர். சில ஆண்டுகள் தங்கிவிட்டு சம்பாதித்த பணத்தில் தொழில் செய்யலாம் என்று ஊர் திரும்பினால் அதற்கான வாய்ப்புகள் குறைவு. பலர் தங்கள் பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர்.


2006 தேர்தலில் கட்சிகள் பெற்ற ஓட்டுகள்

வேட்பாளர்(கட்சி)ஓட்டுகள்
1) பீட்டர் அல்போன்ஸ் (காங்.)53,700
2) கமாலுதீன் (அதிமுக)49,386
3) ஆறுமுகசாமி (பகுஜன் சமாஜ்)6,760
4) திருப்பதி (சுயே)3,229
5) சண்முகவேலு (பாஜக)3,203
6) சண்முகராஜ் (சமாஜ்வாடி)1,372
7) மக்தூம் (சுயே)1,196
8) பாண்டியன் (சுயே)1,110
7) செந்தில் ராஜ் (சுயே)490
மொத்த ஓட்டுகள்(பதிவானவை)1,20,44


சொக்கம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திராட்சை விளைகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளாவிற்கும் திராட்சை அனுப்பப்படுகிறது. தொகுதியில் தென்னை விவசாயம் அதிகம் உள்ளதால் ஆங்காங்கே தென்னை நெட்டியில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இருந்தபோதிலும் குறிப்பிட்டு சொல்லும்படியாக பெரிய தொழில் வாய்ப்புகள் எதுவும் இத்தொகுதியில் இல்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் வலுவாக இருந்த காலம்; 1967ம் ஆண்டு கடையநல்லூர் தொகுதி சந்தித்த முதல் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மஜீத் களமிறங்கினார். இந்தத் தேர்தலில் 446 ஓட்டுகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளருக்கு வெற்றியை அளித்தனர் தொகுதிவாசிகள். சுப்பையா முதலியார் கடையநல்லூரின் முதல் எம்எல்ஏ என்ற பெருமையைப் பெற்றார்.



மறு சீரமைப்பில் இடம்பெற்ற பகுதிகள்

தொகுதி மறுசீரமைப்பில் கடையநல்லூர் தொகுதியில் செங்கோட்டை தாலுகா, தென்காசி தாலுகா (பகுதி) சொக்கம்பட்டி, போகநல்லூர், கம்பனேரி, புதுக்குடி, கனகசபாபதிபேரி, பொய்கை, ஊர்மேலழகியான், கிளாங்காடு, நயினாரகரம், இடைகால், காசிதர்மம் மற்றும் கொடிக்குறிச்சி கிராமங்கள். கடையநல்லூர் நகராட்சி, சாம்பவர்வடகரை, ஆய்க்குடி ஆகிய பேரூராட்சிகள் இடம் பெற்றுள்ளன.




1971ல் இம்முறை திமுக சார்பில் மீண்டும் களமிறங்கிய சுப்பையா முதலியார் 2வது முறையாகவும் எம்எல்ஏ ஆனார். காங்கிரஸ் வேட்பாளர் மஜீத் இம்முறையும் தோல்வியடைந்தார். 1977ல் நடந்த தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரசாக், காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரனை வீழ்த்தினார். தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் இத்தொகுதியில் தோல்வியடைந்தது.



1980ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சாகுல்அமீது வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் கனி தோல்வியடைந்தார். 1984ம் ஆண்டு முதன்முறையாக திமுக, அதிமுக நேருக்குநேர் மோதியது. இதில் அதிமுக வேட்பாளர் பெருமாள் வெற்றி பெற்றார்.



1989ல் நடந்த தேர்தலில் திமுக வேட்பாளராக மீண்டும் கதிரவன் களமிறங்கினார். கடையநல்லூரில் இரண்டு முறை வெற்றியை ருசித்த அதிமுக ஜெ, ஜா என இரண்டு அணிகளாக இத்தேர்தலில் போட்டியிட்டதால், அதன் வேட்பாளர்கள் மூன்றாம், நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டனர். காங்கிரஸ் வேட்பாளர் அய்யாத்துரையை எளிதாக வீழ்த்தி திமுக வேட்பாளர் கதிரவன் எம்எல்ஏவாக தேர்வு பெற்று சட்டமன்றத்தில் கொறடாவாக பணியாற்றினார்.


1991 தேர்தலிலும் அதிமுக & திமுக நேருக்கு நேர் களம் கண்டன. இம்முறை அதிமுக ஜெ, ஜா இரு அணிகளும் இணைந்திருந்தன. வலுவான அதிமுகவிடம் திமுக வேட்பாளர் கதிரவன் இம்முறை தோல்வியடைந்தார். நாகூர்மீரான் மூலம் மூன்றாவது முறையாக அதிமுக வெற்றிபெற்றது. இதன்மூலம் கடையநல்லூர் தொகுதிக்கு முதன்முதலாக அமைச்சர் அந்தஸ்தும் கிட்டியது. 1996ல் நடந்த தேர்தலில் 3வது முறையாக அதிமுக & திமுக நேருக்கு நேர் மோதியது. திமுக வேட்பாளர் நைனாமுகமது அதிமுக வேட்பாளரை எளிதாக வீழ்த்தினர். மூன்றாவது முறையாக திமுக இங்கு வெற்றியை ருசித்தது.

33 ஆயிரம் வாக்காளர்கள் அதிகம்

கடையநல்லூர் தொகுதியில் கடந்த தேர்தலில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 786 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இதில் 87 ஆயிரத்து 420 பேர் ஆண்கள். 88 ஆயிரத்து 366 பேர் பெண்கள். தற்போதைய நிலையில் கடையநல்லூர் தொகுதியில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 687 பேர் ஆண்கள். ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 759 பேர் பெண்கள். கடந்த தேர்தலை விட தற்போது 33 ஆயிரத்து 660 வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மொத்த வாக்குச்சாவடிகள் 224.


2001 தேர்தலில் அதிமுக வேட்பாளர் சுப்பையாபாண்டியன், திமுக வேட்பாளர் ஷாகுலை வீழ்த்தினார். 2006 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்குக் கடையநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் முதல் முறையாக காங்கிரஸ் கூட்டணி பலத்தில் கால் பதித்தது. தென்காசி தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்த பீட்டர் அல்போன்ஸ் கடையநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கமாலுதீன் காங்கிரசிடம் தோல்வியைத் தழுவினார். 4 முறை வெற்றி பெற்ற அதிமுகவால் தொகுதியைத் தக்கவைக்க முடியவில்லை.


கடையநல்லூரில் திமுக, அதிமுக, மாறி மாறி போட்டியிட்ட போதிலும் ஒரு தேர்தலில் வெற்றிபெற்ற அணியால் அடுத்த தேர்தலில் வாகை சூட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பையா முதலியார் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றாலும் ஒரு முறை சுயேட்சையாகவும், மறுமுறை திமுக சார்பிலும் களமிறங்கி வென்றார்.


கடந்த சட்டசபை தேர்தலைப் போல இந்தத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ்தான் இங்கு போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் அதிமுகவே நேரடியாக களமிறங்குகிறது. அக்கட்சி சார்பாக, பி. செந்தூர்பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.அத்தோடு, எஸ்.டி.பி.ஐ என்ற பெயரில் செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பின் அரசியல் கட்சியும் இத்தொகுதியில் தன் கட்சி சார்பாக நெல்லை முபாரக் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதிமுக, திமுக கூட்டணிகளில் இத்தொகுதி வேறு முஸ்லிம் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத நிலையில், எஸ்.டி.பி.ஐக்கு விழும் ஓட்டுகள் இரு திராவிட கட்சிகளின் கூட்டணி வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதாக அமையும்.


வேட்பாளர்கள் மற்றும் பிரசார வியூகம் இவற்றையெல்லாம் கடந்து வெற்றி யாருக்கு என்பது ஜனநாயகத்தின் எஜமானர்களாக விளங்கும் மக்களின் கையில்தான் என்பதில் சந்தேகமில்லை.

inneram.com

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP