காவல்துறையினர் என் கணவரை ஒரு பயங்கரவாதியைப் போல் நடத்துகின்றனர்
7.10.11

குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக, புகார் கொடுத்து, பரபரப்பை ஏற்படுத்தியவர்,காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட். இவருக்கு எதிராக குஜராத்தைச் சேர்ந்த காவலர் பாண்ட் என்பவர் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். அதில், குஜராத்தில், 2002ல் நடந்த கலவரம் தொடர்பாக, முதல்வர் மோடிக்கு எதிராக, தவறான, "அபிடவிட்' தயார் செய்து, கையெழுத்திடும்படி, சஞ்சீவ் பட், தனக்கு மிரட்டல் விடுத்ததாக, தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 30ம் தேதி, சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி சுவேதா, மத்திய உள்துறை அமைச்சருக்கு, இது குறித்து கடிதம் எழுதியிருந்தார். அதில், தன் கணவரின் உயிருக்கு, காவல்துறையினரால் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது, இரண்டாவது முறையாக, மீண்டும் ஒரு கடிதத்தை உள்துறை அமைச்சருக்கு, சுவேதா எழுதியுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கைது செய்யப்பட்டுள்ள என் கணவரை, குஜராத் காவல்துறையினர் பயங்கரவாதியைப் போல் நடத்துகின்றனர். காவல்துறை காவலில் அவர் இருந்தபோது, மிகவும் அழுக்கடைந்த, சுகாதாரமற்ற அறையில், வைக்கப்பட்டிருந்தார். மிகப் பெரிய குற்றம் செய்தவரைப் போல், அவர் நடத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது.
அவரது உயிருக்கு காவல்துறையினரால் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதை, மீண்டும் ஒருமுறை தங்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.
மேலும் எங்களின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, தரக்குறைவான வார்த்தைகளில் என்னை திட்டினர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் எங்களின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, தரக்குறைவான வார்த்தைகளில் என்னை திட்டினர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் சஞ்சீவ் பட் மனைவி சுவேதா குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்துடன், சஞ்சீவ் பட், மோசமாக நடத்தப்படுவதை விளக்கும், "சிடி' ஒன்றையும் அவர் இணைத்து அனுப்பியுள்ளார்.
0 comments:
Post a Comment