"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

3.2.12

மேற்கத்திய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தைகள்தான் இன்றைய காதலும் காதலர் தினங்களும் சீரழிந்த இந்த மேற்கத்திய கலாசாரத்தின் வெளிப்பாடுகள்தான் இவைகள். இன்றைய இளவல்களை கவர்ந்திழுக்கின்ற ஒரு காரணியாக நவீன காதல் அமைந்திருக்கின்றது.


தமது திருமண வாழ்வைத் தீர்மானிப்பதில் தம்மை தாலாட்டி சீராட்டி வளர்த்த தமது தாய் தந்தையரின் தலையீடுகள் சிறிதும் இன்றி முழுவதுமாக தமது சுயவிருப்பின் அடிப்படையிலேயே தமது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள விரும்புகின்றது இன்றைய இளைஞர் சமுதாயம்.


தற்போதைய சூழற்காரணிகளும் அதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது. அந்நிய ஆண்களும் பெண்களும் தனிமையில் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் கலந்து பழகுவதற்கான வாய்ப்புக்களும் தாராளமாகவே காணப்படுகின்றன.


பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் தனியார் கல்விநிலையங்கள் அலுவலகங்கள் மற்றும் பூங்காக்கள் போன்றவற்றில் அந்நிய ஆண்களும் பெண்களும் எந்தவிதமான தடங்கல்களுமின்றி கலந்து பழகுகின்றனர். பழக்கம் தொடர்ந்து கடைசியில் தம்மை ஈன்றெடுத்த தாய் தந்தையருக்கு தெரியாமலேயே அல்லது அவர்களது விருப்பத்திற்கு மாற்றமாக திருமணம் நடந்தேறுகிறது.


தற்போதைய தகவற் தொழிநுட்ப யுகத்தில் இன்றைய காதலையும் காதல் திருமணங்களையும் ஊக்குவிப்பதில் இணையங்களும் (internet) சினிமாக்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.


இந்த காதல் திருமணங்கள் ஆற அமர நிதானமாக சிந்தித்து நடப்பவை அல்ல. மாறாக உணர்வுகளின் உந்துதல்களால் நடைபெறுபவை ஆகும். இவ்வாறு நடந்தேறிய திருமணங்கள் சில மாதங்கள் சில வருடங்கள் சந்தோஷமாக கழிகின்றன‌. பின்னர் கோலங்கள் கலைந்து வாழ்வின் யதார்த்தங்கள் புரிகையில் இவர்களால் அதற்கு முகம் கொடுக்க முடிவதில்லை. பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் என்கின்ற தன்மைகள் அஸ்த்தமித்து அற்பப்பிரச்சினைகளும் சுனாமியாய் உருவெடுக்கின்றன.


உறவுகள் சீர்குலைந்து காதல் கசந்து விருப்புக்கள் வெறுப்பாய் மாறி பூகம்பமாய் வெடிக்கின்றது. நிறைகள் அஸ்த்தமனமடைந்து குறைகள் உதயமாகி குறைகளே பூதாகரமாக காட்சியளிக்கத் தொடங்குகின்றன. கடைசியில் இது விவாகரத்தில் சென்று முடிகின்றது.


அண்மைக்கால பத்திரிகைச் செய்திகளும் ஆய்வறிக்கைகளும் உணர்த்தி நிற்கின்ற ஒரு விடயம் விவாகரத்தில் அதிகளவு இடத்தைப் பிடித்திருப்பதும் தற்போதைய திருமணங்களில் மிகக் குறைந்த ஆயுளை கொண்டதுமான திருமணங்கள் தற்போதைய காதல் திருமணங்களேயாகும்.


மேலும் தமிழ் சினிமாக்களில் சித்தரிக்கப்படுவது போன்று தற்போதைய காதலானது தெய்வீகத் தன்மை வாய்ந்ததாயின் அதில் துளியளவு கூட ஏமாற்றம் தோல்வி துரோகம் என்பன இருக்கக் கூடாது. எனவே இன்றைய இந்த காதல் திருமணங்கள் தெய்வீகத் தன்மை வாய்ந்தது புனிதமானது என்ற வாதங்கள் போலித்தனமானவையாகும்.
இன்றைய காதலால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான். தாய் தந்தையரையும் ஏனைய உறவுகளையும் துறந்து ஆரம்பிக்கின்ற இந்த வாழ்வில் காதலனால் கைவிடப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஆதரிப்போரின்றி தவிக்கின்றனர். இதற்கு தீர்வாக பலர் தற்கொலையை கையிலெடுத்து நிரந்தர நரகத்தை நோக்கி பயணிக்கின்றனர். தற்கொலை


தொடர்பாக நபிகளாரின் பொன்மொழி பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் என்றென்றும் குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகத்திலும் நிரந்தரமாக விஷத்தைக் கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டேயிருப்பார். யார் கூறிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவ்வாயுதம் தமத கையில் இருக்கும் நிலையில் நரகத்தில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் குத்திக் கொண்டேயிருப்பார்.’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: புஹாரி 5778


இன்றைய காதல் சில நேரங்களில் தற்கொலைக்கும் வழிவகுத்து எம்மை நிரந்தர நரகவாதியாகவும் ஆக்கி விடுகிறது. மேலும் அந்நிய ஆண்களும் பெண்களும் நெருங்கிப் பழகுவதை மார்க்கம் வன்மையாக கண்டிக்கின்றது.


கள்ளக்காதல் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது. ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.


‘உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு மணமுடித்துக் கொள்ளுங்கள் – அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும் விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளக் காதல் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால் விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ – அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்இ மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான் ‘. (அல்குர்ஆன் 4:25)


மேலுள்ள அருள் மறை வசனம் திருட்டுத் தனமாக காதல் கொள்வதை தடைசெய்கிறது.


திருமணத்திற்கு முன் ஓர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவது அல்லது ஓர் பெண் ஆணைத் திருமணம் செய்ய விரும்புவதுதான் காதல் என்று சொன்னால் அதனை இஸ்லாம் தாராளமாக அனுமதிக்கின்றது. மாறாக இன்றைய காலகட்டத்தில் காதலின் பெயரால் இடம்பெறுகின்ற வரம்பு மீறிய செயற்பாடுகளைத்தான் தடை செய்கின்றது.


மேலும் திருமணம் செய்ய விரும்புகின்ற பெண்ணை நேரில் நன்கு பார்த்து நாம் எதிர்பார்க்கும் விடயங்கள் பண்புகள் அவளிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது. இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகள் பின்வருமாறு எடுத்தியம்புகின்றன.


‘நான் நபி (ஸல்) அவர்களுடன் வீட்டிலிருந்த போது ஒருவர் வந்து தான் அன்சாரி பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை நீங்கள் பார்த்தீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை நாயகமே! நான் அவளைப் பார்க்கவில்லை என்றார். அப்படியானால் முதலில் அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். மதீனாவாசிகளின் கண்களில் சிறிது கோளாறு இருக்கின்றது என்றார்கள் ‘. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்


‘நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தூதனுப்பினேன். இதனைக் கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் நீங்கள் பெண்ணைப் பார்த்தீர்களா? என வினவினார்கள். இல்லை என்றேன். அவ்வாறாயின் அப்பெண்ணை பார்த்துக் கொள்ளுங்கள். இம்முறையைக் கையாள்வதால் உங்களுக்கிடையில் நட்பும் நல்லிணக்கமும் ஏற்பட வழிபிறக்கும் எனக்கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஹுஃபா(ரழி) நூல்: திர்மிதீ நஸயீ


மேற்படி நபிமொழிகளில் இருந்து ஒருவர் திருமணம் செய்வதாக இருந்தால் கட்டாயம் பெண்ணைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதை அறியலாம். மேலும் திருமணம் செய்து கொடுக்கப்படுவதாக இருந்தால் கட்டாயம் பெண்ணின் விருப்பம் கேட்கப்பட வேண்டும்.


‘பெண்ணின் சம்மதமின்றி செய்யப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் இரத்து செய்துவிட்டார்கள் ‘ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி 5136/ 6968/ 6970


அதே வேளை பெண்ணைப் பொறுத்த வரையில் விரும்பிய ஆண்மகனை தானாக திருமணம் செய்ய முடியாது. மாறாக பொறுப்பாளரே விரும்பிய ஆண்மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என இஸ்லாம் பணிக்கின்றது.


இவ்வாறு செய்கின்ற போது பெண்கள் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றார்கள். இதனால் பெண்ணுடைய வாழ்வுக்கு உரிய உத்தரவாதம் வழங்கப்படுகிறது.


அதே சமயம் பெண் ஒருவனை விரும்புகின்ற போது அவன் இஸ்லாமிய அடிப்படையில் சீதனமின்றி மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன்வருகின்ற போது பெற்றோர் பெண்ணின் உணர்வினை மதித்து அவளது விருப்பப்படி திருமணம் செய்து கொடுக்க முன் வர வேண்டும்



மேலும் திருமணம் செய்து கொள்வதற்காக ஒருவரை ஒருவர் விரும்புகின்ற போது விரும்புபவரும் விரும்பப்படுபவரும் முஸ்லிமாக இருத்தல் வேண்டும். முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதோரை திருமணம் செய்வதை இஸ்லாம் தடைசெய்கின்றது. முஸ்லிமும் முஸ்லிமல்லாதோரும் விரும்புகின்றபோது முஸ்லிமல்லாதோர் இஸ்லாத்தை ஏற்றதன் பிற்பாடு திருமணம் செய்து கொள்ள முடியும்.


ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.


“(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை -அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும் அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;. அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;


இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும் ஒரு
முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)


அதே சமயம் ஒரு ஆணோ பெண்ணோ விரும்புகின்ற வாழ்க்கை மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் காணப்படும் போது அதனைத் தடுப்பது குற்றமாகும்.


எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த வகையில் எமது வாழ்வை அமைத்து ஈருலகிலும் ஏகநாயனின் திருப்தியையும் மன்னிப்பையும் பெறுவோமாக

எஸ்.எல்.எம். – காத்தான்குடி

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP