போராளிகளை, விமானம் ஏறாமல் தடுத்தது எப்படி?
17.3.12
போராளிகளை, விமானம் ஏறாமல் தடுத்தது எப்படி?
ரோம், இத்தாலி: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலுக்குள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தவர்களை, விமானம் ஏறாமல் இஸ்ரேல் எப்படித் தடுத்தது என்ற ரகசியம் இப்போது வெளியாகியுள்ளது. ரகசியம் என்ன? பேஸ்புக் நெட்வேர்க்கின் உதவியுடன் இந்தக் காரியத்தை செய்திருக்கிறது இஸ்ரேலிய உளவுத்துறை.
கடந்த வெள்ளிக்கிழமை டெல்-அவிவ் நகரில் பாலஸ்தீன ஆதரவுக் குழு ஒன்று கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தத் திட்டமிட்டிருந்தது. போராட்டத்தில் கலந்துகொள்ள பல ஐரோப்பிய நகரங்களிலிருந்து போராட்டக்காரர்கள் டெல்-அவிவ் நகருக்கு வந்திறங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் டெல்-அவிவ் செல்லும் விமானங்களில் ஏற முயன்ற பல பயணிகள், ஏறுமுன்னரே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். லண்டன், ஜெனீவா, ரோம் ஆகிய விமான நிலையங்களில் வைத்தே இவர்கள் தடுக்கப்பட்டார்கள்.
போராட்டத்தில் கலந்துகொள்ள இஸ்ரேல் செல்பவர்களை எப்படி சரியாக அடையாளம் கண்டு, விமானம் ஏறாமல் தடுத்தார்கள் என்ற கேள்வி, பலருக்கும் எழுந்திருந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.
போராட்டத்தில் கலந்துகொள்ள போராளிகளைத் திரட்டுவதற்கு, போஸ்புக் நெட்வேர்க்கைப் பயன்படுத்திக் கொண்டது அந்த பாலஸ்தீன ஆதரவுக் குழு. பேஸ்புக்கைத் தொடர்பு கொண்ட இஸ்ரேலிய உளவுத்துறை, அவர்கள் மூலமாகவே போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள ஆட்களின் நிஜப் பெயர்களைப் பெற்றுள்ளது.
அதன்பின், இஸ்ரேலுக்கு வரும் அனைத்து விமானங்களிலும், அந்தப் பெயருடைய பயணிகளைப் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்திருந்தது. இப்படித்தான் போராட்டக்காரர்கள் விமானம் ஏறுமுன்னரே தடுக்கப்பட்டனர்.
இந்த ரகசியம் வெளியானதையடுத்து, பேஸ்புக் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. பாலஸ்தீன அமைப்புகள் சில, பேஸ்புக்கை பகிஷ்கரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.
மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றில் பேஸ்புக், ஓரளவு எதிர்ப்பைச் சந்திக்கலாம்.
“விறுவிறுப்பு.காம்”
0 comments:
Post a Comment