"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


மால்கம் எக்ஸ் என்ற மனித உரிமைப் போராளி

19.5.10


இன்று மே பத்தொன்பது. மால்கம் எக்ஸ் வாழ்ந்திருந்தால் எண்பத்தி ஐந்தாவது பிறந்த தினமாக இருந்திருக்கும். நாற்பது வயது பூர்த்தியாகும் முன்பே துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார் அவர்.

யார் இந்த மால்கம் எக்ஸ்?

இஸ்லாம் என்னும் வாழ்வியல் கொள்கை தந்த ஊக்கத்தால் உந்தப்பட்டு அமெரிக்காவிலும், ஆப்ரிக்காவிலும் கறுப்பு நிறத்தவர்களின் உரிமைகளுக்காக போராடிய மாவீரன்.


அமெரிக்காவில் நிழலுக தாதாக்களை உருவாக்கும் ஹார்லமில் ஒரு சுவிஷேசகரின் மகனாக பிறந்தார் மால்கம் எக்ஸ். மால்கம் லிட்டிலின் பாலப்பருவம் வன்முறைகள் நிறைந்ததாக இருந்தது. தந்தை கொல்லப்பட்டார். தாய் மனநிலை பாதிக்கப்பட்டார். பள்ளிப்படிப்பு நின்று போனது. போதைப் பொருள்தான் வாழ்க்கை என்றானது மால்கம் எக்ஸிற்கு.


வழிப்பறி வழக்கில் சிறைக்குச் சென்றார். சிறை வாழ்க்கையின் போதுதான் மால்கம் லிட்டிலின் வாழ்வில் வசந்தம் எலிஜா முஹம்மதுவின் நேசன் ஆஃப் இஸ்லாம் மூலம் தேடிவந்தது.


பின்னர் மால்கம் லிட்டில் மால்கம் எக்ஸாக மாறினார். எலிஜா முஹம்மதுவின் நம்பிக்கையுரிய நபரானார் மால்கம் எக்ஸ். மால்கம் எக்ஸின் சிந்தனையைத் தூண்டும் உரையும், அர்ப்பணிப்பும் நேசன் ஆஃப் இஸ்லாம் அமைப்பிற்கு புகழைத் தேடித் தந்தது.


பின்னர் எலிஜா முஹம்மதிடமிருந்து அகன்று வேறோரு அமைப்பை உருவாக்கினார் மால்கம் எக்ஸ். அதுதான் இன ரீதியான நேசன் ஆஃப் இஸ்லாமிலிருந்து உண்மையான இஸ்லாத்தை நோக்கிய மால்கம் எக்ஸின் பயணமாக இருந்தது.


அதனைத் தொடர்ந்துதான் 1965 ஆம் ஆண்டு உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொழுது மால்கம் எக்ஸ் அக்கிரமக்காரர்களால் சுடப்பட்டு மரணமடைந்தார்.


மால்கம் எக்ஸ் கொலைவழக்கில் கைதான குற்றவாளி தாமஸ் ஹாகன் சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையானார். இவர் நேசன் ஆஃப் இஸ்லாமின் உறுப்பினராவார். இன்று இவர் தனது பாவச் செயலுக்காக வருத்தப்பட்டாலும் மால்கம் எக்ஸின் கொலைக்குப் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகள் இன்னும் முழுமையாக அவிழ்க்கப்படவில்லை.


கறுப்பு நிறத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக கருதும் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மால்கம் எக்ஸை கொலைச் செய்ய எஃப்.பி.ஐ பலமுறை முயற்சிச் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.


மால்கம் எக்ஸ் அமெரிக்காவில் ஏற்றி வைத்த இஸ்லாம் என்னும் வாழ்வியல் வெளிச்சத்தை அணைத்திட அமெரிக்க ஏகாதிபத்தியம் கடுமையாக முயற்சிச் செய்கிறது. ஆனாலும் இஸ்லாம்தான் வெற்றிபெறும் என்பது வரலாறு கூறும் நிதர்சனமாகும்.


மால்கம் எக்ஸ் கூறிய முக்கியத்துவம் வாய்ந்த கூற்று இங்கு நினைவுக் கூறத்தக்கதாகும்- "சொந்த வரலாற்றை மறந்த சமுதாயம் வரலாறை படைக்க இயலாது' இது அமெரிக்க கறுப்பு நிறத்தவர்களுக்கு மட்டுமல்ல ஆக்கிரமிப்பிற்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படும் சமூகங்களுக்கும் இது பொருந்தும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP